சென்னையிலிருந்து எந்நேரமும் இங்கு பேருந்துகள் உண்டு. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் உண்டு. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. வரலாறு. வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம் ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது. எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக் குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது. இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம். இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது. கிரேதாயுகத்தில் கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி திரேதாயுகத்தில் வ்ருஷபாத்ரி துவாபர யுகத்தில் அஞ்சனாத்ரி கலியுகத்தில் வேங்கடாத்ரி (வேங்கடாசலம்) இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில் எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர் |