பக்கம் எண் :

654

என்றும் புராணங்கள் கூறுகின்றன. திருமலைக்குச் செல்ல நினைப்பதும்
செல்வதும் பாக்கியம். அங்கு சென்று ஸ்ரீனிவாசனைச் சேவிப்பது பெரும்
பாக்கியம். கேட்ட வரங்களையெல்லாம் தரும் கலியுக தெய்வம் இந்த
வேங்கடத்தான் என்று வேதங்கள் அறுதியிடுகின்றன.

     7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம்
வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில்
ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

     ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக
மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும்
இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.

ஸ்ரீனிவாசன் ஈண்டெழுந்தருளியமைக்கு காரணம்

     பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின்
ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு
நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின்
கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில்
ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த
மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று
கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன்
என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக்
கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில்
மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன்
ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.

     இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார்
என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு
என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.