| கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார். திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார். ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாக வரலாறு. வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும் என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில் கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது. பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன் அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் |