அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால் திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது. அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகை கொண்டு ஏற்றுக்கொண்டார். பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய் பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு. ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது. முதல் பிரிவு திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம். மூலவர் கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம். |