3ம் பிரிவு திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர். மூலவர் தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும் திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் தீர்த்தம் பத்ம ஸரோவரம். சிறப்புகள் 1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது. அந்த 7 மலைகள் எவையெனில் 1. வேங்கடாத்ரி வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள் எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று. 2. சேஷாத்ரி ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று. 3. வேதாத்ரி வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால் வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது. 4. கருடாத்ரி திருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது. |