பக்கம் எண் :

683

     இவைகள் சேஷ கருட புராணத்தில் பிரம்மன் நாரதருக்கு உரைத்ததாகச்
சொல்லப்பட்டுள்ளது.

     2. அஷ்டாங்க விமானம்

     பகவான் எழுந்தருளியிருக்கும் விமானங்கள் 96 வகையென்று ஆகம
சாஸ்திரங்கள் கூறும். அவற்றுள் மிக அருமையானது அஷ்டாங்க விமானம்.
திருக்கோட்டியூர், கூடல்மாநகர், உத்திர மேரூர் போன்ற ஸ்தலங்களில்
விமானங்கள் அஷ்டாங்க அமைப்புடன் கூடியவை. இவை 8 அங்கம் 3
(தளம்) அடுக்கு உடையது. அதாவது திருமந்திரமானது
எட்டெழுத்துக்களாகவும், மூன்று பதமாகவும் இருப்பதைப் போல
திருவஷ்டாச்சர மந்திரத்தின் ஸ்தூல வடிவமாக இவைகள் திகழ்கின்றன. ஸ்ரீமந்
நாராயணன் திருமேனி இந்த மந்திரத்தில் அடங்கி 8 அம்சங்களாக
விமானத்தில் நிறைந்திருக்கின்றன என்பது பொருள்.

     3. நம்மாழ்வாரின் பெருமையைக் கண்டு சங்கத் தலைவர் பாடியதென
கோயிலொழுகு நூலில் ஒரு பாடல்.
 

 ஈயாடுவதோ கெருடற் கெதிரே, யிரவிக் கெதிர் மின்மினியாடுவதோ
 நாயாடுவதோ வுறுமிப்புலிமுன், நரிகேசரிமுன் நடையாடுவதோ
 பேயாடுவதோ யழகுருவசி முன், பெருமானடிசேர் வகுளாபரணன்
 ஞாயிறு மாமறையின் தமிழின் னொருசொற் பொறுமோ வுலகிற்
                                              கவியே

     4. நதிகளும் திவ்யதேசங்களும்

     எங்கும் நிறைந்த விஷ்ணுவின் பாதத்தில் இருந்து தோன்றிய கங்கை
பிரசித்தமானவள். அக்கங்கையானது சங்கரன் முடியில் தங்கி பூமி, அந்தரிஷம்,
சுவர்க்கம் ஆகிய மூன்று இடங்களிலும் பிரசித்தி பெற்றது. பகீரதனால் பூமிக்கு
கொண்டுவரப்பட்டதால் பாகீரதியாயிற்று. இந்த கங்கை நதிக் கரையில்தான்
காசி உள்ளது.

     அதற்கப்பால் (காசிக்குத் தெற்கில்) நர்மதை ஓடுகிறது. சகல
பாவங்களையும் போக்கக் கூடியது. அங்கிருந்து பூமிக்குள்ளாகவே கொஞ்ச
தூரம் வந்தால் ஓடிக் கொண்டிருக்கும் சரஸ்வதி பாவத்தைப் போக்கி மோட்சம்
நல்கிட வல்லது.

     அதற்கப்பால் துங்கபத்திரையென்ற பொருணை நதியானது மானிடர்கட்கு
மங்களத்தை தரும் புண்ணிய தீர்த்தமாய் இருப்பதுடன் மேற்கு கடலை நோக்கி
செல்லும் சோணம் என்னும் புண்ணிய நதியை தழுவிக்கொண்டு ஓடுகிறது.

     சுவாமி புஷ்கரணி தீர்த்தம் தன் கரையிலேயே திருவேங்கட மாமலையில்
உள்ளது.