பக்கம் எண் :

84

10. திருப்புள்ளம் பூதங்குடி

     அறிவதறியா னனைத்துலகும்
          உடையானென்னை யாளுடையான்
     குறிய மானி யுருவாய
          கூத்தன் மன்னி யமருமிடம்
     நறிய மலர்மேல் சுரும் பார்க்க
          எழிலார் மஞ்ஞை நடமாட
     பொறிகொள் சிறை வண்டிசை பாடும்
          புள்ளம் பூதங்குடிதானே
                   (1348) பெரியதிருமொழி - 5-1-1

     என்று திருமங்கையாழ்வாரால் பாசுரம் பெற்ற இத்திவ்ய தேசம் திரு ஆதனூர் திவ்ய தேசத்திலிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் உள்ளது.
இரண்டு தலங்கட்கும் கும்பகோணத்திலிருந்து பேருந்து வழியுள்ளது.
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுவாமிமலையில் இறங்கியும்
செல்லலாம்.

வரலாறு.

     இத்தலத்தைப் பற்றி பிர்ம்மாண்ட புராணமும் பாத்ம புராணமும்
குறிப்பிடுகின்றன.

     இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அவனை எதிர்த்துப்
போரிட்ட சடாயு, இராவணன் வாளினால் துண்டிக்கப்பட்டு ராமா, ராமா என்ற
சத்தத்துடன் குற்றுங்குலையுயிருமாய் கிடக்க அவ்வழியே வந்த இராம
லட்சுமணர்கள் இவ்வபயக்குரல் கேட்டு அருகில் சென்று பார்க்க, சீதையை
இராவணன் கவர்ந்து சென்ற விவரத்தைத் தெரிவித்து விட்டு உயிர் துறக்க,
ஜடாயுவுக்கு மோட்சமளித்துவிட்டு, இராமன் அவருக்கு (ச்ரம பரிஹாரம்)
இறுதிக்கடன் செய்த ஸ்தலம். ஜடாயுவுக்கு தீக்கடன் நீர்க்கடன் செய்ய ராமன்
நினைக்கும் போது அதற்குத் துணையாக அருகில் நிற்க தேவியில்லையே
என்று மானசீ கத்தால் ராமன் நினைக்க, சீதையைப் பிரிந்த ராமனுக்கு உதவ
பூமிப்பிராட்டியே பொற்றாமரையில் வந்து நின்று மானசீகமாக காட்சியளிக்க
இராமன் சடாயுவுக்கு செய்ய வேண்டிய கடன் செய்து முடித்தான்