பக்கம் எண் :

85

மூலவர்

     வல்வில் இராமன், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்

     பொற்றாமரையாள்

விமானம்

     சோபன விமானம்

காட்சி கண்டவர்கள்

     க்ருத்ரராஜன்

சிறப்புக்கள்

     1. சூரியனின் மகன்ஜடாயு. இவர் தசரத சக்கரவர்த்திக்குப் பல உதவிகள்
செய்து உயிர்த் தோழராயிருந்தார். சம்பராசுர யுத்தத்தில் இவர் செய்த
உதவியை நினைத்த தசரதன் ஜடாயுவை உயிராகவும், தன்னை உடம்பாகவும்
எல்லோரிடமும் கூறி அதுபோலவே பாவித்தான். எனவேதான் தசரதனின்
மறைவை இராமாயணத்தில்
 

     “உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார்
          உணர்விறந்த கூற்றினாரே”
               என்று கூறினார்.

     இவர் தசரத குமாரர்களான இராமலெக்குவர்களைதம் புதல்வர்போலவே
பாவித்து அன்பு பாராட்ட அவர்களும் இவரைத் தமது பெரியதந்தையாகவே
பாவித்து வந்தனர். ஆதலால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெரிய
உடையார் என்னும் பெயர் இவருக்குண்டாயிற்று.

     2. இச்சடாயுவைப்பற்றி ஞானசம்பந்தர் தனது தேவாரத்தில்
“மறங்கொண்டங்கி ராவணன் தன் வலி கருதி வந்தானை புறங்கொண்ட
சடாயென்பான்” என்றும் “ஆதித்தன் மகனன்ன அகன் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயென்பான்” என்றும் பரக்கப் புகழ்வார். கம்பரும் இவரை,
 

     தூய்மையின் இருங்கலைத் துணிந்த கேள்வியன்
          வாய்மையின் மறுஇலன் மதியின் கூர்மை
     ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
          சேய்மையின்நோக்குறு சிறு கணான் - என்பர்.