3. ஜடாயு என்ற வட சொல்லுக்கு - பலமயிர்கள் சேர்த்து திரித்த ஜடைபோல பலவாய் மிக்குத் திரண்ட ஆயுள் உடையவரென்றும், சிறகில் உயிரை உடையவரென்றும் சடை உடையவரென்றும் பொருள். இந்த ஜடாயுவானவர் தூய்மையின் இருங்கலை துணிந்த கேள்வியர் - அதாவது ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு தத்துவங்களை அறிந்தவர். வாய்மையின் மறு இலன் - அதாவது வாக்கு மாறாத் தன்மை பெற்றவர். மதியின் கூர்மை ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என - அதாவது இவரின் அறிவானது திருமந்திரத்தை அறிந்த கூர்மையுடையது - சேய்மையின் நோக்குறு சிறு கணான் - அதாவது வெகு தொலைவில் நடப்பதைக் காணக்கூடிய ஆற்றல் பெற்ற சிறிய கண்களை உடையவர் என்பதுமாம். 4. சடாயுவாகிய புள்ளிற்கு மோட்சம் கொடுத்து அதன் பூத உடலுக்குச் செய்யவேண்டிய கடன்களை செய்தமையால் புள்ள பூதங்குடியாயிற்று. வைணவ சம்பிரதாயத்தில் (ஸ்ரீவைணவர்கட்கு) இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று ஸ்ரீபெரும்புதூர். மற்றொன்று புள்ளம் பூதங்குடி. இது தஞ்சையருகில் உள்ளது. அது காஞ்சியருகில் உள்ளது இது ராமன் உகந்த இடம். அது ராமானுஜர் அவதரித்த இடம். இதை ஆழ்வார்கள் அபிமானித்தார்கள். அதை ஆச்சார்யார்கள் அபிமானித்தார்கள். 5. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். 6. இராமன் ஜடாயுவுக்கு ச்ரம பரிகாரம் செய்துவிட்டு இங்கு பள்ளி கொண்டான். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது யாரோ இரண்டு கைகளையுடைய பிற தெய்வம் என்றெண்ணி கவனியாது செல்ல, திடீரென்று ஒரு பெரிய ஜோதி வெள்ளம் தெரிய திரும்பிப் பார்த்த திருமங்கையாழ்வாருக்கு நான்கு கரங்களுடன் சங்கு சக்ரதாரியாக ஸ்ரீராமன் காட்சி கொடுப்பதைக் கண்டு அறிய வேண்டியதை அறியாமல் சென்றுவிட்டேன் என்று கூறும் வகையில் “அறிவதறியான் அனைத்துலகும் உடையான்” என்ற பாசுரத்தால் தொடங்கி 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்தார். 7. தகப்பனாருக்குச் ச்ரம பரிஹாரம் பண்ணப் பெறாமையால் உண்டான குறை தீர ஜடாயுவுக்கு அதைச் செய்து அவனுக்கு மோட்சம் தந்து அம்மகிழ்ச்சியால் பொலிவுறத் திகழ்ந்த இராமனை வல்வில் ராமன் என்று தமிழில் வர்ணிக்க வடமொழியில் இதே பொருளில் த்ருட தந்வி என்று வர்ணிக்கின்றனர். |