தொடக்கம் |
|
|
1. திருமலைச் சருக்கம் 5(1). தடுத்து ஆட்கொண்ட புராணம் |
1. | கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு, மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச் செங் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு. |
|
உரை
|
|
2. | பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன் னில் அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த மருவிய தவத்து ஆல் மிக்க வளம் பதி வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ஆம் அன்றே. |
|
உரை
|
|
3. | மாது ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் தீது அகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். |
|
உரை
|
|
4. | தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி, மிக்க ஐம் படை சதங்கை சாத்தி, அணிமணிச் சுட்டி சாத்தி, செம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில். |
|
உரை
|
|
5. | நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு, பரவு அருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று, ரவிய நண்பி னால்ஏ வேண்டினர் பெற்றுத் தங்கள் அரசு இளம் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். |
|
உரை
|
|
6. | பெருமை சால் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் வரு முறை மரபில் வைகி, வளர்ந்து, மங்கலம் செய் கோலத்து அரு மறை முந் நூல் சாத்தி, அளவு இல் தொல் கலைகள் ஆய்ந்து, திரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவம் சேர்ந்தார். |
|
உரை
|
|
7. | தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப வந்த தொல் சிறப்பின் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் செந் திரு அனைய கன்னி மணத் திறம் செப்பி விட்டார். |
|
உரை
|
|
8. | குல முதல் அறிவின் மிக்கோர், கோத்திர முறையும் தேர்ந்தார் நலம் மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று, மலர் தரு முகத்தன் ஆகி, மணம் புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி, ஒத்த பண்பின் ஆல் அன்பு நேர்ந்தான். |
|
உரை
|
|
9. | மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் பெற்றவர் தம் பால் சென்று சொன்ன பின், பெருகு சிந்தை உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். |
|
உரை
|
|
10. | மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி், அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கு அலர்ச் சோலை மூது ஊர் குறுகினார்; எதிரே வந்து பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார். |
|
உரை
|
|
11. | மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சி யால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலர் ஆகி, இகழ்ச்சி ஒன்றானும் இன்றி, ஏந்து பூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி, நீள் முளை சாத்தினார்கள். |
|
உரை
|
|
12. | மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தோர் செய்யத் துணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பு அணை தோளினானைப் புணர் மணத் திருநாள் முன் னால் பொருந்திய விதியினாலே பணை முரசு இயம்ப வாழ்த்திப் பைம்ப் பொன் நாண் காப்புச் சேர்த்தார். |
|
உரை
|
|
13. | மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித் தூமறை மூதூர்க் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்பத் தே மரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக் கா முறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான். |
|
உரை
|
|
14. | காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான் நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையும் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான். |
|
உரை
|
|
15. | வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூநீர்ப் பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம் பொன் திண் கால் ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள். |
|
உரை
|
|
16. | அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி, முகில் நுழை மதியம் போலக் கை வலான் முன் கை சூழ்ந்த துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங் கை உகிர் நுதி முறையில் போக்கி, ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான். |
|
உரை
|
|
17. | தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போது இல் ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறு ஆட்டி மான் மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப் பால் முறை முந்நூல் மின்னப் பவித்திரம் சிறந்த கையான். |
|
உரை
|
|
18. | தூமலர்ப் பிணையல், மாலை, துணர் இணர்க் கண்ணிக் கோதை தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி, மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் நாம நீள் கலன்கள் சாத்தி நன் மணக் கோலம் கொண்டார். |
|
உரை
|
|
19. | மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர், நாதன் தன் அடி மனத்துள் கொண்டு தகும் திரு நீறு சாத்திப் பொன் அணி மணிஆர் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார். |
|
உரை
|
|
20. | இயம் பல துவைப்ப எங்கும், ஏத்து ஒலி எடுப்ப, மாதர் நயந்து பல் லாண்டு போற்ற, நான் மறை ஒலியின் ஓங்க, வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே உயர்ந்த வாகன யானங்கள் மிசைக் கொண்டார் உழையர் ஆனார். |
|
உரை
|
|
21. | மங்கல கீத நாத மறையவர் குழங்கேளாடு தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும் பங்கய முகையும் சாய்த்துப் பணைத்து எழுந்து அணியில் மிக்க குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி. |
|
உரை
|
|
22. | அரும்கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளை களாலும் இருங் குழை மகரத் தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும் கருங் கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே. |
|
உரை
|
|
23. | நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப் பெருங் குடை மிடைந்து செல்லப்பிணங்கு பூங்கொடிகள் ஆட அருங் கடி மணம் வந்து எய்த, அன்று தொட்டு என்றும் அன்பில் வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆமால். |
|
உரை
|
|
24. | நிறை குடம், தூபம், தீபம், நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறை மலர், அறுகு, சுண்ணம், நறும் பொரி பலவும் வீசி உறை மலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார். |
|
உரை
|
|
25. | ‘கண்கள் எண் இலாத வேண்டும் காளையைக் காண’ என்பார் ‘பெண்களில் உயர நோற் றாள் சடங்கவி பேதை’ என்பார் ‘மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம்’ என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார்; ஆடுவார்கள். |
|
உரை
|
|
26. | ‘ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்’ என்பார் ‘தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது’ என்பர் ‘பூண்த யங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி’ என்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன் அன இசைப்பச் சென்றார். |
|
உரை
|
|
27. | வரும் மணக் கோலத்து எங்கள் வள்ளலார் ஆர் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் பெரு மழைக் குலத்தின் ஆர்ப்பப் பரி மிசை இழிந்து பேணும் ஒரு மணத் திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன், உய்ந்தேன். |
|
உரை
|
|
28. | ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள் செய்த சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான், மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து, மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார். |
|
உரை
|
|
29. | கண் இடை கரந்த கதிர் வெண் படம் எனச் சூழ் புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத் தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க. |
|
உரை
|
|
30. | காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச் சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க ஆதபம் மறைக் குடை அணிக் கரம் விளங்க. |
|
உரை
|
|
31. | பண்டி சரி கோவண உடைப் பழமை கூரக் கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத் தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள. |
|
உரை
|
|
32. | மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடி வே யோ? அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமே யோ? மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலே யோ? இத்தகைய வேடம் என ஐயம் உற எய்தி. |
|
உரை
|
|
33. | வந்து, திரு மா மறை மணத் தொழில் தொடங்கும் பந்தர் இடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று ‘இந்த மொழி கேண் மின் எதிர் யாவர்களும்’ என்றான் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான். |
|
உரை
|
|
34. | என்று உரை செய் அந்தணனை எண்இல் மறை யோரும் மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும் நன்று உமது நல்வரவு நங்கள் தவம்’ என்றே ‘நின்றது இவண் நீர் மொழி மின் நீர் மொழிவது என்றார். |
|
உரை
|
|
35. | பிஞ்ஞகனும் நாவலர் பெருந் தகையை நோக்கி, ‘என் இடையும் நின் இடையும் நின்ற இசைவால் யான் முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே நின் உடைய வேள்வியினை நீ முயல்தி’ என்றான். |
|
உரை
|
|
36. | நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான், ‘உற்றது ஓர் வழக்கு என் இடை நீ உடையது உண்டேல், மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்; முற்ற இது சொல்லுக’ என, எல்லை முடிவு இல்லான். |
|
உரை
|
|
37. | ‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந் நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான் தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான். |
|
உரை
|
|
38. | என்றான் இறையோன்; அது கேட்டவர், எம் மருங்கும் நின்றார் இருந்தார் ‘இவன் என் நினைந்தான் கொல்’ என்று சென்றார், வெகுண்டார், சிரித்தார், திரு நாவல் ஊரர் ‘நன்றால் மறையோன் மொழி’ என்று எதிர் நோக்கி நக்கார். |
|
உரை
|
|
39. | நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான், மிசை உத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று, ‘அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால், இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என்? ஏடா! என்ன. |
|
உரை
|
|
40. | மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி ‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார். |
|
உரை
|
|
41. | ‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்; அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார். |
|
உரை
|
|
42. | கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை. |
|
உரை
|
|
43. | ‘ஓலை காட்டு’ என்று நம்பி உரைக்க, ‘நீ ஓலை காணற் பாலையோ? அவை முன் காட்டப் பணி செயல் பாலை’ என்ற வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று மால் அயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார். |
|
உரை
|
|
44. | ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் காவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி பூவனத்து அவரை உற்றார்; அவர் அலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? |
|
உரை
|
|
45. | மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப் பதம் பற்றி நின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி. அறை கழல் அண்ணல் ‘ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை’ எனக் கீறி இட்டார்; முறை இட்டான் முடிவு இலாதான். |
|
உரை
|
|
46. | அரு மறை முறை யிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி. ‘ஒரு முறை முறையோ? என்ன உழை நின்றார் விலக்கி “இந்தப் பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற திரு மறை முனிவரே! நீர் எங்கு உளீர் செப்பும்?” என்றார். |
|
உரை
|
|
47. | என்றலும் நின்ற ஐயர் ‘இங்கு உளேன் இருப்பும் சேயது அன்று; இந்த வெண்ணெய் நல்லூர். அது நிற்க... அறத்து ஆறு இன்றி வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்று இவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை’ என்றான். |
|
உரை
|
|
48. | குழை மறை காதினானைக் கோது இல் ஆரூரர் நோக்கிப் ‘பழைய மன்று ஆடி போலும் இவன்’ என்று பண்பின் மிக்க விழைவு உறு மனமும் பொங்க ‘வெண்ணெய் நல் ஊராய் ஏல் உன் பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய்’ என்றார். |
|
உரை
|
|
49. | வேதியன் அதனைக் கேட்டு ‘வெண்ணெய் நல் ஊரிலே நீ போதினும் நன்று; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் ஆதி இல் மூல ஓலை காட்டி, நீ அடிமை ஆதல் சாதிப்பன்’ என்று முன்னே தண்டு முன் தாங்கிச் சென்றான். |
|
உரை
|
|
50. | செல்லும் மா மறையோன் தன் பின் திரிமுகக் காந்தம் சேர்ந்த வல் இரும்பு அணையும் மா போல், வள்ளலும் கடிது சென்றார்; எல்லை இல் சுற்றத்தாரும் ‘இது என்னாம்’ என்று செல்ல நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி. |
|
உரை
|
|
51. | வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று நாதன் ஆம் மறையோன் சொல்லும் ‘நாவலூர் ஆரூரன் தான் காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி, மூது அறிவீர்! முன் போந்தான்; இது என்றன் முறைப்பாடு’ என்றான். |
|
உரை
|
|
52. | அந்தணர் அவையில் மிக்கார் ‘மறையவர் அடிமை ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை; என் சொன்னாய்? ஐயா! என்றார்; ‘வந்தவாறு இசைவே அன்றோ? வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை தன் தந்தை நேர்ந்தது’ என்றனன் தனியாய் நின்றான். |
|
உரை
|
|
53. | ‘இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில், இன்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்: அசைவு இல் ஆரூரர் எண்ணம் என்?’ என்றார் அவையில் மிக்கார். |
|
உரை
|
|
54. | ‘அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர் என்னைத் தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல் மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்? எனக்கு இது தெளிய ஒண்ணாது’ என்றனன் எண்ணம் மிக்கான். |
|
உரை
|
|
55. | அவ் உரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச் செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி, ‘இவ் உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும்’ என்று உரைத்து, மீண்டும். |
|
உரை
|
|
56. | ‘ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்’ என்ன. ‘முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை, மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன்’ என்றனன் மாயை வல்லான். |
|
உரை
|
|
57. | ‘வல்லை ஏல் காட்டு இங்கு’ என்ன, மறையவன் ‘வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன்’ என்று சொல்லச் ‘செல்வ நான்கு மறையோய்! நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார்; அல்லல் தீர்த்து ஆள நின்றான். ஆவணம் கொண்டு சென்றார். |
|
உரை
|
|
58. | இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச் சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன்; தொன்மை நோக்கித் தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான். |
|
உரை
|
|
59. | ‘அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் வரு முறை மரபு உளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை இருமை யால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து. |
|
உரை
|
|
60. | வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் ஆசு இலா எழுத்தை நோக்கி ‘அவை ஒக்கும்’ என்ற பின்னர் மாசு இலா மறையோர் ‘ஐயா! மற்று உங்கள் பேரனார் தம் தேசு உடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின் என்றார். |
|
உரை
|
|
61. | அந்தணர் கூற ‘இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கைச் சாத்து உண்டாகில், இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி வந்தது மொழி மின்’ என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல். |
|
உரை
|
|
62. | திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன் மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை, அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி, இரண்டும் ஒத்து இருந்தது என்னே! இனிச் செயல் இல்லை’ என்றார். |
|
உரை
|
|
63. | ‘நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர்! தோற்றீர்; பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க மேன்மை யோர் விளம்ப, நம்பி ‘விதி முறை இதுவே ஆகில் யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ’ என்று நின்றார். |
|
உரை
|
|
64. | திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி, ‘அரு முனி! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ் ஊரில் வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக’ என்றார். |
|
உரை
|
|
65. | பொரு வரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் ‘என்னை ஒருவரும் அறியீர் ஆகில் போதும்’ என்று உரைத்துச் சூழ்ந்து பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திரு அருள் துறையே புக்கார், கண்டிலர்; திகைத்து நின்றார். |
|
உரை
|
|
66. | எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் ‘எங்கள் நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ?’ என்று நம்பி தம் பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப, மாதோடு உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார். |
|
உரை
|
|
67. | ‘முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப் பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது துன்பு உறு வாழ்க்கை நின்னைத் தொடர்வு அறத் தொடர்ந்து வந்து நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம்’ என்றார். |
|
உரை
|
|
68. | என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்புக் கேட்ட கன்று போல் கதறி, நம்பி கர சரண் ஆதி அங்கம் துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக, ‘மன்று உளீர்! செயலோ வந்து வலிய ஆட் கொண்டது?’ என்றார். |
|
உரை
|
|
69. | எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பு இடை நிறைய எங்கும் விண்ணவர் பொழி பூமாரி மேதினி நிறைந்து விம்ம, மண்ணவர் மகிழ்ச்சி பொங்க, மறைகளும் முழங்கி ஆர்ப்ப, அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார். |
|
உரை
|
|
70. | ‘மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக’ என்றார் தூமறை பாடும் வாயார். |
|
உரை
|
|
71. | தேடிய அயனும் மாலும் தெளிவு உறா ஐந்து எழுத்தும் பாடிய பொருளாய் உள்ளான் ‘பாடுவாய் நம்மை’ என்ன நாடிய மனத்தர் ஆகி நம்பி ஆரூரர். மன்றுள் ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று. |
|
உரை
|
|
72. | ‘வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட கோது இலா அமுதே! இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?’ என மொழிந்தார். |
|
உரை
|
|
73. | அன்பனை அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார் ‘முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்’ என்றார்; நின்ற வன் பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார். |
|
உரை
|
|
74. | கொத்து ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான் ‘பித்தா பிறை சூடி’ எனப் பெரிதாம் திருப் பதிகம் இத் தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார். |
|
உரை
|
|
75. | ‘முறையால் வரு மதுரத் துடன் மொழி இந் தளம் முதலில் குறையா நிலை மும்மைப் படிக் கூடும் கிழமை யினால் நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான். |
|
உரை
|
|
76. | சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும் பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு’ என்று உறு பரிவில் நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான். |
|
உரை
|
|
77. | அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே? மணம் அழியும் செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள். |
|
உரை
|
|
78. | நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில் மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின் பூஅலரும் தடம் பொய்கைத் திரு நாவலூர் புகுந்து தேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார். |
|
உரை
|
|
79. | சிவன் ‘உறையும் திருத் துறையூர் சென்று அணைந்து’ தீவினை ஆல் அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத் தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப் பதிகம் பாடினார். |
|
உரை
|
|
80. | புலன் ஒன்றும் படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள அலர் கொண்ட நறும் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும் நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம் மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர். |
|
உரை
|
|
81. | திருத் துறையூர் தனைப் பணிந்து, சிவபெருமான் அமர்ந்து அருளும் பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சிப் பொன்புலியூர் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவு உற்று வருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனம் கொண்டார். |
|
உரை
|
|
82. | மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் செல அணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார். |
|
உரை
|
|
83. | ‘உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படை ஆளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன்’ என்று அந் நகரில் புகுதாதே மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார். |
|
உரை
|
|
84. | வரி வளர் பூஞ் சோலை சூழ் மடத்தின் கண் வன் தொண்டர் விரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள் பரிவு உடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார். |
|
உரை
|
|
85. | அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங் கணரும் முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே பொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல் பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார். |
|
உரை
|
|
86. | அந்நிலை ஆரூரன் உணர்ந்து ‘அரு மறையோய்! உன் அடி என் சென்னியில் வைத்தனை’ என்னத் ‘திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண்’ என்று அருள, அதற்கு இசைந்து தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன். |
|
உரை
|
|
87. | அங்கும் அவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச் செங் கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூர் ஆளி, ‘இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார்?’ என்னக் கங்கை சடைக் கரந்த பிரான் ‘அறிந்திலையோ?’ எனக் கரந்தான். |
|
உரை
|
|
88. | ‘செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன்?’ எனத் தெளிந்து ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த கைம் மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார். |
|
உரை
|
|
89. | பொன் திரளும் மணித் திரளும் பொரு கரி வெண் கோடுகளும் மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறுங் குறடும் வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் ‘தென் திசையில் கங்கை’ எனும் திருக் கெடிலம் திளைத்து ஆடி. |
|
உரை
|
|
90. | அங் கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்தப் பொங்கு நதித் தென் கரை போய்ப் போர் வலித் தோள் மாவலி தன் மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த செங்கண்அவன் வழி பட்ட திரு மாணிக் குழி அணைந்தார். |
|
உரை
|
|
91. | பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப் போய்ப் பணிந்தவர்க்கு வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி, நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி அரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார். |
|
உரை
|
|
92. | தேம அலங்கல் அணி மாமணி மார்பின் செம்மல், அம் கயல்கள் செங் கமலத்தண் பூமலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவித் தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி. |
|
உரை
|
|
93. | நாக, சூத, வகுளம், சரளம், சூழ் நாளிகேரம், இவங்கம், நரந்தம் பூகம், ஞாழல், குளிர் வாழை, மதூகம், பொதுளும் வஞ்சி, பல எங்கும் நெருங்கி, மேக சாலம்மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார். |
|
உரை
|
|
94. | வன்னி, கொன்றை, வழை, சண்பகம், ஆரம், மலாப் பலாசொடு செருந்தி, மந்தாரம் கன்னி காரம், குரவம், கமழ் புன்னை, கற்பு பாடலம், கூவிளம் ஓங்கித் துன்னு சாதி, மரு, மாலதி, மௌவல், துதைந்த நந்தி, கரம் வீரம், மிடைந்த பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ |
|
உரை
|
|
95. | இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து, நவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்கக் வலம் கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும், தடம் மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார். |
|
உரை
|
|
96. | மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறைச் சுரும்பு அறை புரத்தின் மருங்கேம், குன்று போலும் மணி மாமதில் சூழும் குண்டகக் கழ்த் கமல வண்டு, அலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச் சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார |
|
உரை
|
|
97. | பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும் சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படல் ஆலும் தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திரு வாயில் முன் எய |
|
உரை
|
|
98. | அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார்அவர்கேளா? நம்பி ஆரூரர் தாமோ? முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து, பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும், பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு |
|
உரை
|
|
99. | அங் கண் மாமறை முழங்கும் மருங்கே, ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும்; மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும்; வாச மாலைகளில் வண்டு முழங்கும்; பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்; திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் |
|
உரை
|
|
100. | போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு இல ஓங்கி, மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர்வானில் அடுப்ப, மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும். |
|
உரை
|
|
101. | ஆடு தோகை, புடை நாசிகள் தோறும்; அரணி தந்த சுடர், ஆகுதி தோறும்; மாடுதாமம். மணி வாயில்கள் தோறும்; மங்கலக் கலசம். வேதிகை தோறும்; சேடு கொண்ட ஒளி. தேர் நிரை தோறும்; செந்நெல் அன்ன மலை. சாலைகள் தோறும்; நீடு தண் புனல்கள், பந்தர்கள் தோறும்; நிறைந்த தேவர் கணம் நீ |
|
உரை
|
|
102. | எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப் புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும், அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங் |
|
உரை
|
|
103. | மால், அயன், சதமகன், பெருந் தேவர், மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச் சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக் காலம் நேர் படுதல் பார்த்து அயல் நிற்பக் காதல் அன்பர் கண நாதர் புகும்பொன் கோலம் நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங |
|
உரை
|
|
104. | பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு வருமுறை வலம் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்; அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயி |
|
உரை
|
|
105. | வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த கைகேளா! திளைத்த கண்கேளா! அந்தக் கரணமோ! கலந்த அன்பு உந்தச் செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான்; திருக் களிற்றுப்படி மருங்கு. |
|
உரை
|
|
106. | ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு அரும் காரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக. இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெரும் கூத்தின் வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். |
|
உரை
|
|
107. | தெள் நிலா மலர்ந்த வேணியாய்! உன் தன் திரு நடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்’ என்று் கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் பண்ணினால் நீடி அறிவுஅரும் பதிகம் பாடினார், பரவினார், பணிந்தார். |
|
உரை
|
|
108. | தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெரும் தாண்டவம் புரிய எடுத்த சேவடியார் அருளினால் ‘தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால்’ என வானில் அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார். |
|
உரை
|
|
109. | ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேல் கொண்டு, சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும் தொறும் புறவிடை கொண்டு, மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம் கொண்டு வணங்கினர் போந்து, நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து. |
|
உரை
|
|
110. | நின்று கோபுரத்தை நிலம் உறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி, மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி, மன்னிய திருப்பதி அதனில், தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சிக் கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார். |
|
உரை
|
|
111. | புறந் தருவார் போற்றி இசைப்பப் புரி முந்நூல் அணி மார்பர் அறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் சிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார். |
|
உரை
|
|
112. | ‘பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி உள்ளும் நான் மிதியேன்’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள. |
|
உரை
|
|
113. | மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சித் ‘தெண் திரை வேலையில் மிதந்த திருத் தோணி புரத் தாரைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி’ என்று பண் தரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார். |
|
உரை
|
|
114. | இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள வெருக் கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பிப் பெருக்கு ஓதம் சூழ் புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த் திருக் கோலக்கா இறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள் பாடி. |
|
உரை
|
|
115. | தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால் ஆனாப் பேர் அன்பு மிக, அடி பணிந்து தமிழ் பாடி மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கிக் கான் ஆர்க்கும் மலர்த் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார். |
|
உரை
|
|
116. | வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் பைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்து ஆடித் தம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர் அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார். |
|
உரை
|
|
117. | மின் ஆர் செஞ் சடை அண்ணல் விரும்பு திருப் புகலூரை முன் ஆகப் பணிந்து ஏத்தி முதல்வன் தன் அருள் நினைந்து, பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் தென் நாவலூர் ஆளி, திருவாரூர் சென்று அணைந்தார். |
|
உரை
|
|
118. | தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு ‘ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வாரா நின்றான்; அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்!’ என்று நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள் செய்தார். |
|
உரை
|
|
119. | தம்பிரான் அருள் செய்யத் திருத் தொண்டர் அது சாற்றி ‘எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் நம் பிரானார் ஆவார் அவர் அன்றே’ எனும் நலத்தால் உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார். |
|
உரை
|
|
120. | மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத் தாளின் நெடும் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும் நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொன் தசும்பும் ஒளி நெடு மணி விளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார். |
|
உரை
|
|
121. | சோதி மணி வேதிகைகள் தூநறும் சாந்து அணி நீவிக் கோது இல் பொரி பொன் சுண்ணம், குளிர் தரள மணி பரப்பித் தாது அவிழ் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களும் சமைத்து வீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத் தெளித்தார். |
|
உரை
|
|
122. | மங்கல கீதம் பாட, மழை நிகர் தூரியம் முழங்கச் செங் கயல் கண் முற்றுழையார் தெற்றி தொறும் நடம் பயி இல நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் பொங்கு எயில் நீள் திருவாயில் புறம் உற வந்து எதிர்கொண்டார். |
|
உரை
|
|
123. | வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார், திருத் தொண்டர் தம்மை நோக்கி, ‘எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்!’ என்னும் சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார். |
|
உரை
|
|
124. | வான் உற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித் தேன் உறை கற்பக வாச மாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி, ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங் கைகேளாடும் தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார். |
|
உரை
|
|
125. | புற்று இடம் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் பற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்கயத்தாள் அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி, நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார். |
|
உரை
|
|
126. | அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக முன்பு முறைமை யினால் வணங்கி, முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி, நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி, நாயகன் சேவடி எய்தப் பெற்ற இன்ப வெள்ளத்து இடை மூழ்கி நின்றே, இன்னிசை வண்தமிழ் மாலை பாட. |
|
உரை
|
|
127. | வாழிய மா மறைப் புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்குத் ‘தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம்; நாம் முன்பு தொண்டு கொண்ட வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி! மண் மேல் விளையாடுவாய்’ என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே. |
|
உரை
|
|
128. | கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே, ‘ஆட்கொள வந்த மறையவனே! ஆரூர் அமர்ந்த அருமணியே! வாள் கயல் கொண்ட கண் மங்கை பங்கா! மற்று உன் பெரிய கருணை அன்றே! நாட் கமலப் பதம் தந்தது இன்று நாயினேனைப் பொருள்ஆக’ என்றார். |
|
உரை
|
|
129. | என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பி னோடும், வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்; அன்று முதல் அடியார்கள் எல்லாம் ‘தம்பிரான் தோழர்’என்றே அறைந்தார். |
|
உரை
|
|
130. | மை வளர் கண்டர் அருளினாலே வண்தமிழ் நாவலர் தம் பெருமான் சைவ விடங்கின் அணிபுனைந்து, சாந்தமும் மாலையும் தாரும் ஆகி, மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய, மிக்க விழுத்தவ வேந்தர் என்னத் தெய்வ மணிப் புற்றுஉளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார். |
|
உரை
|
|
131. | இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப் பொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங் குழல் சேடிமாரில் கதிர்த்த பூண் ஏந்து கொங்கைக் கமலினி அவதரித்தாள். |
|
உரை
|
|
132. | கதிர் மணி பிறந்தது என்ன, உருத்திர கணிகை மாராம் பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம் விதி யுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி. |
|
உரை
|
|
133. | பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெரும் சுற்றம், திங்கள் விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப, மிக்கோர் ‘வர மலர் மங்கை இங்கு வந்தனள்’ என்று சிந்தை தர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவம் சேர்ந்தார். |
|
உரை
|
|
134. | மான் இளம் பிணையோ? தெய்வ வளர் இள முகையோ? வாசத் தேன் இளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக் கான் இளம் கொடியோ? திங்கள் கதிர் இளம் கொழுந்தோ? காமன் தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ? என்ன. |
|
உரை
|
|
135. | நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன பாடும் இன் இசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம் கூடும் அன்பு உருகப் பாடும் கொள்கை யோர் குறிப்புத் தோன்ற. |
|
உரை
|
|
136. | பிள்ளைமைப் பருவம் மீதுஆம் பேதைமைப் பருவம் நீங்கி், அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம் கெள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப உள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார். |
|
உரை
|
|
137. | பாங்கியர் மருங்கு சூழப் படர் ஒளி மறுகு சூழத் தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை, அன்பி னோடும் பூங் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார். |
|
உரை
|
|
138. | அணி சிலம்பு அடிகள், ‘பார் வென்று அடிப் படுத்தனம்’ என்று ஆர்ப்ப மணி கிளர் காஞ்சி அல்குல், வரி அரவு உலகை வென்ற துணிவு கொண்டு ஆர்ப்ப, மஞ்சு சுரி குழற்கு அழிய, விண்ணும் பணியும் என்று இன வண்டு ஆர்ப்பப் பரவையார் போதும் போதில். |
|
உரை
|
|
139. | புற்று இடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார் சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரைக் கண்டார். |
|
உரை
|
|
140. | ‘கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல் சுமந்து வில் குவளை பவள மலர் மதி பூத்த விரைக் கொடியோ? அற்புதமோ சிவன்அருளோ? அறியேன்’ என்று அதிசயித்தார். |
|
உரை
|
|
141. | ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ? மூவுலகின் பயன்ஆகி முன் நின்றது’ என நினைந்து நாவலர் காவலர் நின்றார்; நடு நின்றார் படை மதனார். |
|
உரை
|
|
142. | தண் தரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும் கெண்டை நெடும் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப் பண்டை விதி கடைக் கூட்டப் பரவையாரும் கண்டார். |
|
உரை
|
|
143. | கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப விண் கொள்ளாப் பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்இயலுக்கு எண் கொள்ளாக் காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும். |
|
உரை
|
|
144. | ‘முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால் தன்நேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ? மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ? என்னே! என் மனம் திரித்த இவன் யாரோ?’ என நினைந்தார். |
|
உரை
|
|
145. | அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால் உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும், வண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதுஆக்கிக் கண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செல உய்ப்ப. |
|
உரை
|
|
146. | பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம் தாம் கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும் தேன் கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப் பூங் கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய்ப் புகுந்தார். |
|
உரை
|
|
147. | வன் தொண்டர் அது கண்டு ‘என் மனம் கொண்ட மயில் இயலின் இன் தொண்டைச் செங் கனி வாய் இளம் கொடி தான் யார்? என்ன, அன்று அங்கு முன் நின்றார் ‘அவர் நங்கை பரவையார் சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார்’ எனச் செப்ப. |
|
உரை
|
|
148. | ‘பேர் பரவை; பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் ஆர் பரவை; அணி திகழும் மணி முறுவல் அரும் பர்அவை சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் ஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை; |
|
உரை
|
|
149. | என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால், முன் தொடர்ந்து வரும் காதல் முறைமை யினால் தொடக்கு உண்டு ‘நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்று உடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக. |
|
உரை
|
|
150. | பரவையார் வலம் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே புரவலனார் கோயிலில் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் விரவு பெருங் காதலினால் மெல் இயலார் தமை வேண்டி, அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர். |
|
உரை
|
|
151. | அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின் மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து எவ்வாறு சென்றாள் என் இன் உயிர்ஆம் அன்னம்’ எனச் செவ் வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார். |
|
உரை
|
|
152. | ‘பாசம்ஆம் வினைப் பற்று அறுப்பான் மிகும் ஆசை மேலும், ஓர் ஆசை அளிப்பது ஓர் தேசு மன்ன என் சிந்தை மயக்குற ஈசனார் அருள் எந் நெறிச் சென்றதே? |
|
உரை
|
|
153. | ‘உம்பர் நாயகர் தம் கழல் அல்லது நம்புமாறு அறியேனை நடுக்கு உற வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று, எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே? |
|
உரை
|
|
| 154. | பந்தம் வீடு தரும் பரமன் கழல் சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை வந்து மால் செய்து மான் எனவே விழித்து, எந்தையார் அருள் எந் நெறிச் சென்றதே? |
|
உரை
|
|
155. | என்று சாலவும் ஆற்றலர்’ என் உயிர் நின்றது எங்கு’ என, நித்திலப் பூண் முலை மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் சென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின். |
|
உரை
|
|
156. | காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான் யாவரோடும் உரை இயம்பாது இருந்து, ‘ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் பூவின் மங்கையைத் தந்து’ எனும் போழ்தினில். |
|
உரை
|
|
157. | நாட்டு நல்இசை நாவலூரன் சிந்தை வேட்ட மின் இடை இன் அமுதத்தினை காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் பூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக. |
|
உரை
|
|
158. | எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு பொய்கையில் பகல் போக்கிய புள் இனம் வைகு சேக்கை கண் மேல்செல வந்தது பையுள் மாலை; தமியோர் புனிப்பு உற. |
|
உரை
|
|
159. | பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் பரன் அஞ்சு எழுத்தும் உணரா, அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான். |
|
உரை
|
|
160. | மறுவில் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்’ என்று, நறு மலர்க் கங்குல் நங்கை, முன் கொண்ட புன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா. |
|
உரை
|
|
161. | அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆர்உயிர் வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல், பரந்த வெம் பகற்கு ஒல்கிப் பனி மதிக் கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம். |
|
உரை
|
|
162. | தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மை யே சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய், ஆற்ற அண்டம் எலாம் பரந்து, அண்ணல் வெண் நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா. |
|
உரை
|
|
163. | வாவி புள் ஒலி மாறிய மாலையில், நாவலூரரும் நங்கை பரவையாம் பாவை தந்த படர் பெரும் காதலும் ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். |
|
உரை
|
|
164. | ‘தம் திருக் கண் எரி தழலில் பட்டு வெந்த காமன் வெளியே உருச் செய்து வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே! எந்தையார் அருள் இவ் வண்ணமோ?’ என்பார். |
|
உரை
|
|
165. | ‘ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர் நீர்த் தரங்க நெடும் கங்கை நீள் முடிச் சாத்தும் வெண் மதி போன்று இலை; தண் மதி. |
|
உரை
|
|
166. | ‘அடுத்து மேல் மேல் அலைத்து எழும் ஆழியே! தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக் கடுத்த நஞ்சு, உன் தரங்கக் கரங்களால் எடுத்து நீட்டு நீ! என்னை இன்று என் செயாய்? |
|
உரை
|
|
167. | ‘பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை, சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில், புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!’ |
|
உரை
|
|
168. | இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் தன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம். |
|
உரை
|
|
169. | கனம் கொண்ட மணி கண்டர் கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல இனம் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும் தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர் பால் தனித்துச் சென்ற மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையைச் சார்ந்தாள். |
|
உரை
|
|
170. | சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார், வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் ஏறி, மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் மாறு இல் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து. |
|
உரை
|
|
171. | அவ் அளவில் அருகு இருந்த சேடிநேர் முகம் நோக்கி, ‘ஆரூர் ஆண்ட மை விரவு கண்டரை நாம் வணங்கப் போம் மறுகு எதிர் வந்தவர் ஆர்?’ என்ன ‘இவ் உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்ட. சைவ முதல் திருத் தொண்டர்; தம்பிரான் தோழனார்; நம்பி’ என்றாள். |
|
உரை
|
|
172. | என்ற உரை கேட்டலுமே ‘எம் பிரான் தமரேயோ! என்னா முன்னம் வன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க, நின்ற நிறை, நாண்முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி, மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது. |
|
உரை
|
|
173. | ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி ஈர இளம் தளிர்க் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம், பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று அதன் மீது சமிதை என்ன, மாரனும் தன் பெரும் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான், வந்து. |
|
உரை
|
|
174. | மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல் மருங்கு ஆற்றாள்; மங்குல் வானில், நிலவு உமிழும் தழல் ஆற்றாள்; நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும், கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரம் ஆற்றாக் கையள் ஆகி, இலவ இதழ்ச் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இ |
|
உரை
|
|
175. | ‘கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாள் மதியம் கனல்வான் எனை; இச் சந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்! வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும் ஆல், அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய |
|
உரை
|
|
176. | ‘புலரும் படி யன்று இரவு என்ன அளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா; உலரும் தனமும் மனமும்; வினையேன் ஒருவேன் அளவோ? பெரு வாழ்வு உரையீர்! பலரும் புரியும் துயர்தான் இதுவோ? படை மன் மதனார் புடை நின்று அகலார்; அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்’ |
|
உரை
|
|
177. | ‘தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரீர்! நீரே அல்லால் ஆர் என் துயரம் அறிவார்? அடிகேள்! அடியேன் அயரும் படியோ? இதுதான்; நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண்தலையின் புடையே ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்? |
|
உரை
|
|
178. | என்று இன்னனவே பலவும் புகலும் இருள்ஆர் அளகச் சுருள் ஓதியையும் வன் தொண்டரையும் படிமேல் வர, முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள், ‘அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி. |
|
உரை
|
|
179. | மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ, ‘மங்கை பரவை தன்னைத் தந்தோம்; இன் அவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்’ என்று அருளிப் பொன்னின் புரி புன் சடையன்; விடையன்; பொருமா கரியின் உரிவை புனைவான், அன்னம் நடையாள் பரவைக்கு ‘அணியது ஆரூரன் பால் மணம்’ என்று அருளது. |
|
உரை
|
|
180. | காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரையில் இருளும் கங்குல் கழி போம் யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடிச் சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத் தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார். |
|
உரை
|
|
181. | தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன் பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப் பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார். |
|
உரை
|
|
182. | தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம் பன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும் மின் இடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார். |
|
உரை
|
|
183. | மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தறெ்றிச் சீதளத் தரளப் பந்தர்ச் செழும் தவிசி இழிந்து தங்கள் நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி. |
|
உரை
|
|
184. | அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச் சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச் சுந்தரச் சுழியம் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி, இந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற. |
|
உரை
|
|
185. | கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் ‘ஐயனுக்கு அழகிது ஆம்’ என்று ஆய்இழை மகளிர் போற்றச் சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார். |
|
உரை
|
|
186. | ‘நாவலூர் வந்த சைவ நல் தவக் களிறே!’ என்றும் மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப! என்றும் தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ’ என்றும் மேவினர் இரண்டு பாலும் வேறு வேறு ஆயம் போற்ற. |
|
உரை
|
|
187. | கைக் கிடா, குரங்கு, கோழி, சிவல், கவுதாரி, பற்றிப் பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல, மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ, மைக் கரும் கண்ணினார்கள் மறுக, நீள் மறுகில் வந்தார். |
|
உரை
|
|
188. | பொலம் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத, இலங்கு ஒளி வலயப் பொன் தோள் இடை இடைமிடைந்து தொங்கல் நலம் கிளர் நீழல் சூழ, நான்மறை முனிவரோடும் அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில். |
|
உரை
|
|
189. | கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து விண்ணவர் ஒழிய, மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி எண் இலார் இருந்த போதில் ‘இவர்க்கு யான் அடியேன் ஆகப் பண்ணு நாள் எந்நாள்!’ என்று பரமர் தாள் பரவிச் சென்றார். |
|
உரை
|
|
190. | ‘அடியவர்க்கு அடியன் ஆவேன்’ என்னும் ஆதரவு கூரக், கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார் கடி கொள் பூங் கொன்றை வேய்ந்தார், அவர்க்கு எதிர் காணக் காட்டும் படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு. |
|
உரை
|
|
191. | ‘மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து, அன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை நன் பெரும் பரம ஆனந்த நன் மது என் தரத்தும் அளித்து, எதிர் நின்றன. |
|
உரை
|
|
192. | ‘ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின; காலன் ஆர் உயிர் மாளக் கறுத்தன; மாலை தாழ் குழல் மா மலையாள் செங் கை சீலம் ஆக வருடச் சிவந்தன. |
|
உரை
|
|
193. | ‘நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன; வேதி யாதவர் தம்மை வேதிப்பன; சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய; ஆதி மால் அயன் காணா அளவின. |
|
உரை
|
|
194. | வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன; பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன; ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன; பூத நாத! நின் புண்டரீகப் பதம்! |
|
உரை
|
|
195. | இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் அந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி, மன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப் பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார். |
|
உரை
|
|
196. | ‘பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்; ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்; அருமை ஆம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்; இருமையும் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்’ என்று. |
|
உரை
|
|
197. | நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர் ’நான் இங்கு ஏதம் தீர் நெறியைப் பெற்றேன்’ என்று எதிர் வணங்கிப் போற்ற ‘நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொல் மாலை கோது இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற. |
|
உரை
|
|
198. | தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச் சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர், ‘இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் யார்? பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்’ என்ன. |
|
உரை
|
|
199. | தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன் அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் ‘தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று எல்லை இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி’ என்றார். |
|
உரை
|
|
200. | மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் சென்னி உற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில், முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள, அந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார். |
|
உரை
|
|
201. | தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது, அன்பு சேரத் தாழ்ந்து, எழுந்து அருகு சென்று எய்தி, நின்று, அழியா வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார். |
|
உரை
|
|
202. | தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச் செம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம், உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார். |
|
உரை
|
|
203. | உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த நம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவு அணைந்தார்; தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன். |
|
உரை
|