3. இலை மலிந்த சருக்கம்
12. குங்குலியக் கலய நாயனார் புராணம்
1.வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர்க் கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக்
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்.
உரை
2.வயல் எலாம் விளை செஞ்சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம்
அயல் எலாம் வேள்விச் சாலை அணை எலாம் கழுநீர்க் கற்றை
புயல் எலாம் கமுகின் காடு அப்புறம் எலாம் அதன் சீர் போற்றல்
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திருக் கடவூர் என்றும்.
உரை
3.குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்
சடங்கு உடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
உரை
4.துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவிச்
செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம் பால் நாறும்
மங்குல் தோய் மாடச் சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் நாறும்.
உரை
5.மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார்
அருமறை முந் நூல் மார்பின் அந்தணர்; கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார்; ஒழுக்கம் மிக்கார்.
உரை
6.பாலன் ஆம் மறையோன் பற்றப் பயம் கெடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து,
காலனார் உயிர் செற்றார்க்குக் கமழ்த குங்குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்.
உரை
7.கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண் நுதல் எம்பிராற்குப்
பொங்கு குங்குலியத் தூபம் பொலிவு உறப் போற்றிச் செல்ல
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்.
உரை
8.இந் நெறி ஒழுகும் நாளில் இலம் பாடு நீடு செல்ல
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்
பல் நெடும் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்.
உரை
9.யாது ஒன்றும் இல்லை ஆகி இரு பகல் உணவு மாறிப்
பேது உறும் மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல் செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக்
கோது இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்.
உரை
10.அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக,
ஒப்பு இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
`இப் பொதி என் கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டு,
முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார்.
உரை
11.ஆறு செஞ்சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு ஆன
நாறும் குங்குலியம் ஈதேல் நான்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறாப் பேறு பெற்று வைத்து
வேறு இனிக் கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார்.
உரை
12.`பொன் தரத் தாரும்' என்று புகன்றிட வணிகன் தானும்
`என் தர இசைந்தது' என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;
அன்று அவன் அதனை வாங்கி அப் பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்து எழும் களிப்பினோடும்.
உரை
13.விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் நம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி, எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச்
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்; தமக்கு ஒப்பு இல்லார்.
உரை
14.அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதியம் தூர்த்துத் தரணி மேல் நெருங்க எங்கும்
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்க
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட
உரை
15.மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு தன்னில், அயர்வு உறத் துயிலும் போதில்
நல்தவக் கொடியனார்க்குக் கனவிடை நாதன் நல்கத்
தெற்றென உணர்ந்து, செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்.
உரை
16.கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
`எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்துப் போற்றித்
தம் பெரும் கணவனார்க்குத் திரு அமுது அமைக்கச் சார்ந்தார்.
உரை
17.காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
`சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப்
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக' என்றார்.
உரை
18.கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கை
அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித்
தலை மிசைப் பணிமேல் கொண்டு, சங்கரன் கோயில் நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார்.
உரை
19.இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று, திரு மனையாரை நோக்கி,
`வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவு எலாம் என்கொல்? என்ன
`அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்.
உரை
20.மின் இடை மடவார் கூற மிக்க சீர்க் கலயனார் தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி,
`என்னையும் ஆளும் தன்மைத்து; எந்தை, எம்பெருமான், ஈசன்,
தன் அருள் இருந்த வண்ணம்' என்று கை தலைமேல் கொண்டார்.
உரை
21.பதும நல்திருவின் மிக்கார் பரிகலம் திருத்திக் கொண்டு,
`கதும், எனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்ப ரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி, மேவும் இன் அடிசில் ஊட்ட,
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம்.
உரை
22.ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.
உரை
23.செங்கண் வெள் ஏற்றின் பாகன்; திருப் பனந் தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட, அரசன் ஆர்வம்
பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல.
உரை
24.மன்னவன் வருத்தம் கேட்டு மாசு அறு புகழின் மிக்க
நன்னெறிக் கலயனார் தாம் `நாதனை நேரே காணும்
அந்நெறி தலை நின்றான்' என்று அரசனை விரும்பித் தாமும்
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.
உரை
25.மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று,
தொழுது போந்து, அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும்
செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார்.
உரை
26.காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்
தீது இலாச் சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி.
உரை
27.சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
`யானும் இவ் இளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும்' என்று,
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்.
உரை
28.நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின், திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்; அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
உரை
29.பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி;
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார் பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து.
உரை
30.`விண் பயில் புரங்கள் வேவ, வைதிகத் தேரில் மேருத்
திண்சிலை குனிய நின்றார் செந்நிலைக் காணச் செய்தீர்
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே
பண் புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்.
உரை
31.என்று மெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்
மன்று இடை ஆடல் செய்யும் மலர்க் கழல் வாழ்த்தி வைகி.
உரை
32.சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவு தம் பணியில் தங்கி, நிகழும் நாள் நிகரில் காழித்
தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும்
அலர் புகழ் அரசும் கூட அங்கு எழுந்து அருளக் கேட்டு.
உரை
33.மாறு இலா மகிழ்ச்சி பொங்க, எதிர் கொண்டு, மனையில் எய்தி,
ஈறு இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி,
நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்.
உரை
34.கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி,
விருப்பு உறும் அன்பு மேல் மேல் மிக்கு எழும் வேட்கை கூர,
ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து, சிவ பத நிழலில் சேர்ந்தார்.
உரை
35.தேன் நக்க கோதை மாதர் திரும் நெடும் தாலி மாறிக்
கூனல் தண் பிறையினார்க்குக் குங்குலியம் கொண்டு, உய்த்த
பான்மைத் திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்.
உரை