8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
48. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
1.வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச்
செய்ய சடையர் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்;
ஐயடிகள்; நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.
உரை
2.திருமலியும் புகழ் விளங்கச் சேண் நிலத்தில் எவ் உயிரும்
பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்.
உரை
3.மன்னவரும் பணி செய்ய வடநூல் தென்தமிழ் முதலாம்
பன்னு கலைப் பணிசெய்யப் பார் அளிப்பார் 'அரசாட்சி
இன்னல்' என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி,
நன்மை நெறித் திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார்.
உரை
4.தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள்ஆன எலாம்
கண்டு இறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்தே
வண் தமிழின் மொழி வெண்பா ஓர் ஒன்றா வழுத்துவார்.
உரை
5.பெருத்து எழு காதலில் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி, நெடும் தகையார்
விருப்பின் உடன் செந் தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார்.
உரை
6.அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி,
இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச்
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ் உலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார்.
உரை
7.இந் நெறியால் அரன் அடியார் இன்பம் உற இசைந்த பணி
பல் நெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்;
கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்.
உரை
8.பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப் பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கை அணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்.
உரை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
9.உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திருக்
களத்து முது குன்றர் தரு கனகம் ஆற்றினில் இட்டு
வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெருந்திருவாரூர்க்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்.
உரை