திருத்தொண்டர் புராணமும் - உரையும்1

நான்காம் பகுதியின் முன்னுரை
     1. மூன்றாம்பகுதி வெளியிட்டு இரண்டரை ஆண்டுகளில் இந்த நான்காம் பகுதி வெளிவருகின்றது - திருவருள் : இதனுள் ஆளுடைய பிள்ளையார் புராணம் 1 - 632 பாட்டுக்களின் உரையும், தேவாரக் குறிப்புக்களும், வருகின்றன. அவரது புராணம் எஞ்சிய பகுதி ஐந்தாம் பகுதியாக வெளிவரும்; ஆறாம் பகுதியாகப் புராணத்தின் எஞ்சிய பாட்டுகள் வெளிவரத் திருவருள் கூட்டி வைக்கும் என்று நம்புகிறேன். பாட்டுக்களில் மிகுதிக் கேற்ப அந்த ஆறாம் பகுதி இரண்டு பாகங்களாக1 [VI (1). VI (2)] வெளிவரும்.
பெரியோர் பலரின் உதவிகளும் நன்றியும்
     2. இவ்வெளியீட்டினிடையில் அன்பர்கள் மகிழ்தற்குரியதொரு பெருநிகழ்ச்சி ஒன்றினைத் திருவருள் கூட்டிற்று; அஃதாவது இவ்வுரை முழுதும் எழுத்துப்பணி நிறைவெய்தியமையும் அதன் பொருட்டுத் திருத்தில்லையில் 12-7-1948 ஆனித் திருமஞ்சனத் திருநாளில் அச்சுவடிகளை இறைவர் திருவடிகளிற் சார்த்தி வழிபட்ட வழிபாடும், சிறப்பு அரங்கேற்றக் கூட்டமும் ஆம். இதனைப் பற்றிய விவரம் இப்பகுதியின் முகப்பில் தரப்பட்டுள்ளது. இனி, எஞ்சிய பகுதிகளை அச்சிட்டு நிறைவேற்றி வெளிவரக் காணுதல் திருவருட்டுணை கொண்டு அன்பர்களின் கடமை. இப்பகுதி பல பெரியோர்களின் அன்புகனிந்த பேருதவிகளால் வெளிவந்துள்ளது என்பதனை நன்றியறிதலுடன் இங்கு எடுத்துரைப்பது எனது கடமை. ஆளுடைய பிள்ளையாரது முதற்பதிக நிகழ்ச்சி வரை உள்ள சீகாழியினைப் பற்றிய முதற்சஞ்சிகை தருமபுர ஆதீனம் மகா சந்நிதானங்களின் அருளாசியினால் அவர்களது டிரஸ்டி உரிமைப்பட்ட மேற்படி தேவஸ்தான வெளியீடாகப் போந்தது; அதனை 25-4-47 சீகாழியில் திருமுலைப்பால் விழா நன்னாளில் வெளியிடச் செய்து அரங்கேற்ற விழாவும் நிகழ்த்தியருளினார்கள். அடுத்த இரண்டாம் சஞ்சிகை பிள்ளையாரது தில்லை, திருக்கழிப்பாலை, வழிபாட்டினை உட்கொண்டு நிற்கும் உரிமைபற்றிச் சிதம்பரம் - சி. ப. தேவார பாடசாலை அதிபர் திரு. பழனியப்ப முதலியார் அவர்களின் அன்பு மேலிட்ட உதவியை உட்கொண்டது; மூன்றாவது சஞ்சிகை பிள்ளையாரது திருப்பனந்தாள் - வழி பாட்டினை உட்கொண்டிருந்தமை பற்றித் திருப்பனந்தாள் - ஸ்ரீ காசிமடம் - அதிபர் ஸ்ரீமத் அருணந்தித் தம்பிரான் சுவாமிகளின் அருளுதவிகொண்டு வெளிவந்தது; நான்காவது சஞ்சிகை பிள்ளையாரது திருவாவடுதுறை வழிபாட்டினை உட்கொண்டு விளங்குதலின் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானங்களின் ஆசியினை உட்கொண்ட அருளாணையின்படி வெளிவந்துள்ளது; இவர்கட்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றியினை அவ்வச் சஞ்சிகைகளின் முகப்பில் அவ்வப்போதே வெளிப்படப் பகர்ந்துள்ளேன்.
உரை எழுத்து நிறைவு விழா
     உரை எழுத்துப்பணி நிறைவு விழாவில் வழிபாட்டிலும், சிறப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டும் எல்லாவகையாலும் உடனிருந்து உதவி ஊக்கமும் ஆசியும் வாழ்த்தும் வழங்கி நின்ற எல்லாப் பெருமக்களுக்கும் என் வணக்கமாகிய நன்றியறிவித்துக் கொள்கின்றேன். அந்நிறைவு விழாவில் புராண உரை எழுதி முடிந்ததனைக் காட்டும் அறிகுறியாக 13வது வெள்ளானைச் சருக்கத்திறுதி 14 பாட்டுக்களின் உரை அச்சிட்டு வழங்கப்பட்டது; அதில் "பின்னுரையின் முன்னுரை" என்ற வரலாறு கவனித்தற்குரியது.
1. இவை VI, VII பகுதிகளாக வெளிவந்துள்ளன.