பக்கம் எண் :

498திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) ஆழம் மிக்க ஆக்கயந்தலைத் தலை - மிக்க
ஆழத்தையுடைய அவ்வாவியின்கண், வாழும் மீனம் அனைத்தையும் -
வாழுகின்ற மீன்கள் அனைத்தையும், வாய்ப் பெய்து - விழுங்கி, நந்து சூழ
முத்து ஈனும் துறைக்கணே - சங்குகள் சுற்றிலும் முத்துக்களை ஈனுகின்ற
அத்துறையின்கண், ஓர் செய்ய தாள் மடநாரை தாழ்வது - ஒரு சிவந்த
கால்களையுடைய இளமை பொருந்திய நாரை தங்கா நின்றது.

     கயந்தலை - கயம்; வாவி. தாழ்தல் - தங்குதல். நாரை வாய்ப்பெய்து
தாழ்வது என முடிக்க. (3)

சிறிய நாண்மழை யின்றியச் சேயிதழ்
வெறிய தாமரை யோடை வியன்கரை
இறைகொணாரை யிருவினைப் பௌவமும்
வறிய தாகி வறப்ப வறந்ததால்.

     (இ - ள்.) சிறிய நாள் மழை இன்றி - சில நாள் மழையின்மையால்
அச்சேய் இதழ் வெறிய தாமரை ஓடை - அந்தச் சிவந்த இதழ்களையும்
மணத்தையுமுடைய தாமரை மலர்கள் நிறைந்த வாவி, வியன்கரை இறைகொள்
நாரை - அதன் அகன்ற கரையின்கண் தங்கிய நாரையின், இருவினைப்
பௌவமும் வறியதாகி வறப்ப - இரு வினையாகிய கடலும் பயனற்றதாய்
வறக்குமாறு, வறந்தது - நீர் வற்றியது.

     வெறிய : வெறி என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம்.
நல்வினையும் பிறவிக்கேதுவாகலின் 'இருவினைப் பௌவமும்' என்றார்.
வறியதாகி வறத்தல் - பயனின்றியொழிதல். இந்நாரை வேறிடஞ் சென்று
முனிவர்கள் கூறும் புராணப் பொருள் கேட்டு அறியாமை நீங்கி இறைவனை
வழிபட்டு முத்தி பெறுதற்கு முதலிற் காரணமாயிருந்தது இவ்வோடை நீர்
வற்றியது ஆகலின் 'இருவினைப் பௌவமும் வறப்ப வறந்தது' என்றார்.
ஓடை வறந்தது என முடிக்க. ஆல் : அசை. (4)

நுரைசெ றித்தன்ன நோன்சிறை நாரையும்
இரைவி ரும்பியவ் வாவி யிகந்தொரீஇ
விரைய வந்தொரு கானிடை வீழ்ந்ததால்
புரையி லோர்க்கிட னாகுமப் பொங்கர்வாய்.

     (இ - ள்.) நுரை செறித்தன்ன நோன்சிறை நாரையும் - நுரையினைச்
செறித்து வைத்தாலொத்த வலிய சிறைகளையுடைய அந்நாரையும், இரை
விரும்பி - இரை அருந்துதலை விரும்பி, அவ்வாவி இகந்தொரீஇ - அந்த
வறண்ட வாவியினின்று நீங்கி, விரைய வந்து ஒரு கானிடை வீழ்ந்தது -
விரைந்து வந்து ஒரு காட்டிலே சோர்ந்து விழுந்தது; புரை இலோர்க்கு
இடன் ஆகும் அப்பொங்கர்வாய் - குற்றமில்லாத முனிவர்களுக்கு இடமாகிய
அக்காட்டின்கண்.