பக்கம் எண் :

முதற் காண்டம்14

                   ஊரும் பேரும்

                     13
சீரிய மறைநூற் பூண்ட செழுந்தவத் தரிய மாட்சி
நேரிய வுளத்தி லோங்கி நேமிகாத் தவனைக் காத்த
வேரியங் கொடியோன் காதை விளம்பவக் கொடிவிள் பைம்பூ
வாரிய னூரிற் றேம்பா வணி யெனப் பிணித்தல் செய்வாம்.
 
சீரிய மறை நூல் பூண்ட செழுந் தவத்து அரிய மாட்சி
நேரிய உளத்தில் ஓங்கி, நேமி காத்தவனைக் காத்த,
வேரி அம் கொடியோன் காதை விளம்ப, அக் கொடிவிள்

                                         பைம்பூ,
ஆரியனூரில், தேம்பாவணி எனப் பிணித்தல் செய்வாம்.

     சிறந்த வேத நூல் அடிப்படையில் தாங்கிய அரிய தவத்தின்
மாண்பினால் நேர்மையான உள்ளத்தோடு உயர்ந்து நின்று, இவ்வுலகினைக்
காத்த ஆண்டவனை வளர்ப்புத் தந்தையாக இருந்து காத்த, மணமுள்ள
அழகிய பூங்கொடியைத் தாங்கிய வளனின் வரலாற்றைப் பாவால்
சொல்வதற்கு, அந்தப் பூங்கொடியில் மலர்ந்த பசுமையான பூக்களைக்
கொண்டே, ஆரியநல்லூரில், தேம்பாவணி என்ற பெயரால் மாலையாகக்
கட்டத் தொடங்குவோம்.

    வளன் தாங்கிய பூங்கொடியின் மலர்கள் 3615 என்று (முடி
சூட்டுபடலம், 131) கொள்வதற்கேற்ப தேம்பாவணிப் பாடல் தொகை 3615
என்பது அறிக.

    ஆரியநல்லூரின் பழைய பெயர் கோனாங்குப்பம்.

                    (பாயிரம் முற்றும்)