12
|
வருந்திய
நசையா னானும் வரைந்தவை வரைந்து காட்டத்
திருந்திய தமிழ்ச்சொல் லில்லாற் செவிப் புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைக ணோக்கிற் புணர்ந்தமட் கலத்தைப் பாரா
தருந்திய வமுது நன்றே லருத்தியோ டருந்தல் செய்வார். |
|
வருந்திய
நசையால், நானும் வரைந்தவை வரைந்து காட்ட,
திருந்திய தமிழ்ச் சொல் இல்லால், செவிப் புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தைப் பாராது,
அருந்திய அமுது நன்றேல், அருத்தியோடு அருந்தல் செய்வார்.
|
ஆகிர்த மரியாள்
எழுதியவற்றை, உந்தித் தூண்டிய ஆசையால் நானும்
எழுதிக் காட்டியுள்ளேன். திருந்திய தமிழ்ச் சொல் அறிவு போதுமான அளவு
எனக்கு இல்லாமையால், நல்லோர் தம் செவியறிவாகிய கேள்விக்குக் கசப்பு
ஊட்டுவனவாகப் பொருந்திய குறைகளை இதனிற் காணவுங் கூடும். எனினும்,
அவர் நல்லோராகையால், இதனில் அடங்கிய அமுது அருந்துவதற்கு
நல்லதென்று கண்டால், அது பொருந்தியுள்ள மண் பாத்திரத்தின் குறையைப்
பாராமல், ஆசையோடு அருந்தவே செய்வர்.
அமுது நூற் பொருளுக்கும்
கலம் அதனைப் புலப்படுத்தக்
கருவியாகக் கொண்ட சொல்லுக்கும் உருவகமாகக் கொள்க. இவ்வாறு
பொருள் கொள்ளாது, சொல்லின் குறைபாட்டைத் தமிழுக்கு ஏற்றிக் கூறுதல்
எவ்வாற்றானும் பொருந்துவதன்று. முன் 'வண்டமிழ்' (6) என்றவிடத்து. ஒரு
மொழியின் பிற வளங்களுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கும் சொல்
வளமே முதன்மை பெறும். எதனிலும் குறையே காணும் தீயோரை விடுத்து,
''குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்,'' என்ற
குறள் (504) அடிப்படையில் இது நல்லோர்க்குக் கூறியதாகக் கொள்க.
''ஆசை பற்றி அறைய லுற்றேன்,'' என்ற கம்பர் வாக்கும் கருதுக. 'அமுது
அருந்திய நன்றேல்' என மாற்றிக் கூட்டி, 'அருந்திய' என்பது 'செய்யிய'
என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சமாகக் கொள்க.
|