பக்கம் எண் :

முதற் காண்டம்376

     மழை மேகத்தினின்று வெடித்துப் பாய்ந்த இடி தாக்கியது போல், தன்
மனைவி தன் முன் வந்து சேரும் போதெல்லாம் உடலும் உயிரும் உடைந்து,
தானே நேரிற் கண்டு கருப்பமென்று தெளிவு பெறுவதனால், வெள்ளப்
பெருக்கின் முன் உடைந்த நீண்ட கரையின் தன்மைபோல், தானும் அத்
துன்பத்தின் முன் உள்ளம் உடைந்து கரைந்து தோன்றினான்.

                  மரியாள் ஆற்றாமை

                      79
உயர்வினை உணர்கிலா துடலை யின்னுயிர்
பெயர்வினை போன்றுதன் றலைவன் பேருளத்
தயர்வினை யனைத்துமுள் ளறிந்த மங்கையுந்
துயர்வினை யடைந்துளத் தரற்றித் தோன்றினாள்.
 
உயர் வினை உணர்கு இலாது, உடலை இன் உயிர்
பெயர் வினை போன்று, தன் தலைவன் பேர் உளத்து
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும்,
துயர் வினை அடைந்து, உளத்து அரற்றித் தோற்றினாள்.

     இக்கருப்பம் உயர்வான ஒரு நிகழ்ச்சி என்று உணராமல், உடலை
விட்டு இனிய உயிர் நீங்குவதற்கு உரிய ஒரு செயலாகக் கருதி, தன்
தலைவனாகிய சூசை பெருந்தன்மை வாய்ந்த தன் உள்ளத்துள் சோர்வு
கொள்ளும் செயல் அனைத்தையும் தன் உள்ளத்துள் அறிந்துள்ள
மங்கை மரியாளும், துயரம் கொள்ளும் செயலுக்குத் தானும் உட்பட்டு,
தன் உள்ளத்துள் புலம்பிய வண்ணம் காணப்பட்டாள்.

     கருப்பம் எனக் கண்டு ஊரைக் கூட்டாமலும், மனைவியிடத்துத்
தனியாகக் கடிந்து வினவாமலும், பேச்சே எடாமலும், தனக்குள் வருந்தி
அமைந்த சூசையின் உள்ளம் 'பேருள்ளம்' எனப்பட்டது. 75-ம் பாடல்
காண்க. உண்மையை உள்ளவாறு அறிந்த மரியாள், தன் கணவன் துயர்
துடைக்க முற்படாமைக்குக் காரணம் அடுத்த பாடலில் காணப்படுகின்றது.

 
                80
நிறைபடச் சிறப்பொடு நிமலன் செய்யருள்
மறைபடற் றகவென மனத்தி லெண்ணலோ
டறைபடத் திருவுள மறிந்தி லாமையாற்
பொறை படத் துறந்துயர் புகன்று தீர்க்கிலாள்.