பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்1

பதின்மூன்றாவது


பைதிர நீங்கு படலம்

     எரோதன் கொடுமைக்கு அஞ்சிச் சூசையும் மரியாளும்
குழந்தைநாதனை எடுத்துக் கொண்டு சூதேய நாட்டைவிட்டு எசித்து
நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டதைக் கூறும் பகுதி. பைதிரம் என்பது
நாடு.

                    சூசைக்கு வானவன் கட்டளை

     - - காய், - - காய், - மா, - மா, - - காய்
 
                      1
களிமுகத்தி னிவையாகிப் பைம்பூ மேய்ந்த கனலொப்பச்
சுளிமுகத்தி னுற்றதுய ருள்ளம் வாட்டித் துகைத்தன்னார்
வளிமுகத்தின் விளக்கன்ன மயங்கி யேங்க வந்தவையான்
கிளிமுகத்தின் கிளவியொடு விரும்பி யிங்கண் கிளக்குகிற்பேன்.
 
களி முகத்தின் இவை ஆகி, பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப,
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டித் துகைத்து, அன்னார்,
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை, யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளக்கு கிற்பேன் :

     இவையெல்லாம் மகிழ்ச்சியோடு நடந்த பின், பசுமையான பூவை
மேய முற்பட்ட நெருப்புப் போல, சினந்த தன்மையாக வந்தடைந்த
துயரம் தம் உள்ளத்தை வாட்டி மிதிக்கக்கொண்டு, சூசையும்
மரியாளுமாகிய அவர்கள், காற்றின் முன் இட்ட விளக்குப்போல மயங்கி
ஏங்குமாறு நேர்ந்தவற்றை, கிளியினிடம் தோன்றும் இனிய சொல்லோடு
நான் இங்கு விரும்பிச் சொல்ல முற்படுவேன்:

     இப்பகுதி பற்றிய செய்தி, பு. ஏ., மத்தேயு 2 ; 13 - 15 காண்க.
'மடக்கிளி கிளக்கும் புன்சொல்' பாயிரம் 6.

                      2

பூந்தாமக் கொம்பனையாள் பூத்த பைம்பூ முகைமுகத்திற்
றேந்தாமத் திருமகனேர்ந் தின்னு மெண்ணாள் செலவன்னார்
தாந்தாமக் கடிநகர்கண் டங்க லுள்ளி நாடொறும்பொற் காந்தாமக் கோயில்விழா வணியின் வெஃகிக் கனிசேர்வார்.