பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்13

                    23
அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞான நெடுஞ்சுட ரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட வேந்தன் குணத்துரி நகரு நாடும்
வலை புறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்த தன்றே.
 
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் சீக்க, யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடுஞ் சுடர் அனையான் போக,
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து, உரி நகரும் நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து, இருள் மொய்த்தது அன்றே
.

     கடலைப் புறத்தே சூழக் கொண்ட இவ்வுலகத்தில் செறிந்துள்ள
இருளைப் போக்கும் வண்ணம், உடலுள்ள நிலையைப் புறத்தே காட்டி
வந்துதித்த நெடிய ஞானச் சுடர் போன்ற ஆண்டவன் நீங்கிப் போகவே,
கொலையை வெளிப்டையாகவே கொண்ட எரோது மன்னனின்
குணத்தைப் போலவே, அவனுக்குரிய நகரத்திலும் நாட்டிலும் வலையாக
மூடிக்கொண்டது போன்ற பாவம் மலிந்து, இருளே மொய்த்தது.


                 24
கதிதள்ளி யுயர்வா னேற்றுங் கனிந்ததம்
                            வேந்த னோடும்
பதிதள்ளி யமரர் போகப் பகையுநீண் பசியு நோயு
நிதி தள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீய யாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே
 
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக, பகையும் நீண் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்,
மதி தள்ளி மருட்டும் பேயும் மறுகுடி ஆயிற்று அன்றே.

     உயர்ந்த வானுலகம் முடிவில்லாது போற்றும் கனிவுக்குரிய தம்
அரசனாகிய ஆண்டவனோடு வானவரும் அந்நகரை விட்டு விலகிப்
போகவே, பகையும் நீடித்த பசியும் நோயும் செல்வத்தைப் போக்கிய
வறுமையும் கேடும் இகழ்ச்சியும் தீயன யாவும், வந்து சேர்ந்ததோடு,
அறிவை அகற்றி மயக்கும் பேயும் அங்கு குடியாய் வந்து சேர்ந்தது.