பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்189

                     129
வெருவிமுரி யாதபடை முரியமுரி தற்குலகில் வெருவுதரு
                       நான்விளிய நீகொள்
பெருவிலது செய்தொழில்கொ லுவமையில நின்கடவுள்
                       பெறுவலியி தென்றலறி யோவான்
செருவிலுயிர் தந்துதிர முழுகிநில் கண்டிவனோர்
                       சிலையொடுபொ ரப்புவியி லாரார்
மருவியெதிர் வாளிதொட மடிவரல துய்வரென மருளியெவ
                       ருங்கடித கன்றார்.
 
"'வெருவி முரியாத படை முரிய, முரிதற்கு உலகில் வெருவு தரு
                    நான் விளிய, நீ கொள்
பெரு வில்லது, செய்தொழில், கொல்? உவமை இல நின் கடவுள்
                    பெறு வலி இது!' என்று அலறி ஓவான்
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு, 'இவன் ஓர்
                    சிலையொடு பொர, புவியில், ஆர் ஆர்
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர்?' என மருளி,
                    எவரும் கடிது அகன்றார்.

     "ஓவான் சோசுவனை நோக்கி, 'எவருக்கும் அஞ்சி முறியாத
என் படை முறியவும், எப்படையும் முறிவதற்கு உலகில் அச்சம் தந்து
நிற்கக்கூடிய நான் மடியவும் செய்த இத்தொழில் நீ கொண்டிருக்கும் பெரிய
வில்லினுடைய வலிமையோ? ஒப்பில்லாத உன் கடவுள் கொண்டுள்ள
வல்லமையே இது!' என்று அலறி, அப்போரில் உயிரைத் தந்து உதிரத்தில்
மூழ்கினான். பகைவீரர் இந்நிலைமை கண்டு, 'இவன்தன் ஒப்பற்ற வில்லைக்
கொண்டு போர் செய்ய, இவனை நெருங்கி எதிரே அம்பு தொடுக்க
முற்படின், யாரும் மடிவாரே அல்லாமல், உயிர் பிழைப்பவர் யார்?' என்று
மருண்டு, யாவரும் விரைவில் அகன்றனர்.

     விலது - 'வில்லது' என்பதன் இடைக்குறை.