67 |
எந்தை நீதவத்
தேந்திய வில்லினா
னிந்தை யாய்வெறி வென்றனை நின்பெயர்ச்
சிந்தை யாலவை யாவருஞ் சீக்கவும்
வந்தை யாய்வர மேவகுத் தேனென்றான். |
|
"எந்தை, நீ
தவத்து ஏந்திய வில்லினால்,
நிந்தையாய் வெறி வென்றனை; நின் பெயர்ச்
சிந்தையால் அவை யாவரும் சீக்கவும்,
வந்தையாய், வரமே வகுத்தேன்" என்றான். |
"என் தந்தையே,
நீ தாங்கிய தவம் என்னும் வில்லினால்,
பேய்களுக்கெல்லாம் இகழ்ச்சி உண்டாகுமாறு அவற்றை வென்றுள்ளாய்;
உனக்கு வந்தனை செலுத்தும் வகையில், உன் பெயரைச் சிந்திப்பதன்
மூலமே யாவரும் அவற்றை அழிக்கவும் வரம் தந்தேன்" என்றான்.
68 |
என்ற நாதனை
யேத்திவி யப்புளத்
தொன்ற நீடுது திப்பவு ணர்வெலாங்
குன்ற வாசியைக் கூறினன் கூளியை
வென்ற மாதவத் தாண்மையின் வீரனே. |
|
என்ற நாதனை
ஏத்தி, வியப்பு உளத்து
ஒன்ற நீடு துதிப்ப, உணர்வு எலாம்
குன்ற, ஆசியைக் கூறினன் கூளியை
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே. |
பேய்களை வென்ற
பெருந்தவத்தின் ஆண்மை கொண்ட வீரனாகிய
சூசை, அவ்வாறு சொல்லிய ஆண்டவனைப் போற்றி, தன் உள்ளத்தில்
வியப்புப் பொருந்த நெடு நேரம் துதித்து, தன் உணர்வெல்லாம் ஒடுங்க
நின்று, அவனுக்கு வாழ்த்துக் கூறினான்.
சோரு
தோர்வைப் படலம் முற்றும்
ஆகப்
படலம் 24க்குப் பாடல்கள் 2194
|