பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 1

இருபத்தைந்தாவது
 

குழவிகள் வதைப் படலம்

     இயேசு குழந்தையைக் கண்டு கொல்ல இயலாத மன்னன் எரோதன்
இயேசுவும் சேர்ந்து மடியுமாறு நாட்டிலுள்ள அவ்வயதுக்
குழந்தைகளையெல்லாம் வதைத்துக் கொன்றதைக் கூறும் பகுதி.

                   எரோதன் கலக்கம்

     - மா, கூவிளம், - விளம், -விளம், -மா

 
                          1
சென்மு கத்திடிச் சினத்தொலி முழங்கிய வெம்போர்
கொன்மு கத்தெரிக் குணுக்கின மியற்றிய காலை
பொன்மு கத்தொளிப் புரிசைமா நகரிலா யவைநாஞ்
சொன்மு கத்திவட் டொடையொடு தொடருது முரைத்தே.
 
செல்முகத்து இடிச்சினத்து ஒலி முழங்கிய வெம்போர்
கொன்முகத்து எரிக் குணுங்கு இனம் இயற்றிய காலை,
பொன் முகத்து ஒளிப் புரிசை மாநகரில் ஆயவை நாம்
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே.

     நகர நெருப்பிற்கிடக்கும் பேய்க் கூட்டம் மேகத்தில் தோன்றும்
இடியைப் போன்ற சின ஒலி முழங்கிய கொடிய போரை வீணாக எகித்து
நாட்டிற் செய்து கொண்டிருந்த வேளையில், தன்னிடத்துப்
பொன்னொளியைப் பரப்பும் மதில் சூழ்ந்த எருசலேம் மாநகரில்
நிகழ்ந்தவற்றை நாம் சொல்லும் முகத்தால் இங்குத் தொடை அமைப்புள்ள
பாவினாள் உரைத்துக் கதையைத் தொடர்வோம்.

     கொன் - 'வீண்' என்ற பொருளைத் தரும் உரிச்சொல். தொடை
- எதுகைமோனை போன்ற செய்யுளுறுப்புக்களைக் குறிக்கும் சொல்; இங்கு
ஆகுபெயராகச் செய்யுளைக் குறித்தது. குணுங்கு இனம் - குணக்கினம்.