பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 2

                         2
புராதனந்தரும் புகழ்மறை யூதர்நா டளித்துத்
தராத ரந்தருந் தடத்ததோ ளுருமுமிழ் தனுக்கை
நிரோரு கந்தரு நீண்டதார் கரிக்கொடி தாங்கு
மெரோத னென்றருஞ் சடத்தகோ னெருசலே மாண்டான்
 
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்துத்
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனுக்கை
நிரோருகம் தரும் நீண்ட தார் கரிக்கோடி தாங்கும்
எரோதன் என்று அருஞ் சடத்த கோன் எருசலேம் ஆண்டான்


     
புகழ் வாய்ந்த பழமையான வேதம் வழங்குகின்ற யூதர்களின்
நாட்டைக் காத்து, மலையை ஒத்த பெரிய தோளும் இடியைக்கக்கும்
வில்லைத் தாங்கிய கையும், தாமரை மலரால் அமைந்த நீண்ட மாலையும்
உடையவனாய், யானைக்கொடி தாங்கிய எரோதன் என்னும் மிகக் கொடிய
மன்னன் அந்நாளில் எருசலேமை ஆண்டு கொண்டிருந்தான்.

     வில்லன் நாணை இழுத்து விடும்போது பிறக்கும் ஓசை 
இடியோசைக்கு ஒப்பாகக் கூறப்பட்டது. தடத்த - தட எனும் உரிச்
சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம். அரிய வழக்கு நீரோருகம் நிரோருகம்
எனக் குறுக்கல் விகாரம் பெற்றது.

 
               3
ஆள வாசையா லல்லவைக் கஞ்சிலான் றன்கோ
னீள வாசையா னீதிக்கோற் கோட்டிய கயத்தான்
காள வாசையாற் கலங்கிய வெருளினா னுணர்வு
மாள வாசையான் மயங்கிய சிந்தையிற் கொடியான்.
 
ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான்; தன்கோல்
நீள ஆசையால் நீதிக்கோல் கோட்டிய கயத்தான்;
காள ஆசையால் கலங்கிய வெருளினான்; உணர்வு
மாள, ஆசையால் மயங்கிய சிந்தையிற் கொடியான்.


    அவன் தானே நாட்டை ஆள வேண்டுமென்ற ஆசையால்
பாவங்களுக்கு அஞ்சாதவன்; தனது ஆட்சி பிற நாடுகளிலும் நீள
வேண்டுமென்ற ஆசையால் செங்கோலைக் கொடுங்கோலாய் வளைத்த
கயவன்; அறிவை இருளச் செய்யும் ஆசையால் கலங்கி அஞ்சும்
இயல்புள்ளவன்; நல்லுணர்வு அழிந்த காரணத்தால், ஆசையால் மயங்கிய
நெஞ்சத்தோடு எக்கொடுமையும் செய்யக் கூடியவன்.