பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 108

      பூ மலர்தல் மனத்தால் வாழ்த்துதலுக்கும், பறவை பாடுதல் வாயால்
வாழ்த்துதலுக்கும் பொருந்துவதாய்க் கொள்க. இயேசு பெருமான் தம் மலைப்
பொழிவில் (மத். 6 : 25 - 30) பறவைகளையும் பூக்களையும் மக்களுக்கு
எடுத்துக் காட்டுகளாய்ச் சுட்டிக் காட்டுகின்றார் என்பது இங்குக்
கருதத்தக்கது.

 
                   72
விரைசெய் கானலம் வெஃகில நெடியதோர் நெறியிற்
கரைசெய் சால்சிலைக் கஞ்சில கருதிய கடல்சேர்
திரைசெய் நூலிவண் டெளியவாய்ந் தனைத்தையுங் கடந்து
நிரைசெய் சீர்கெழு நிமலனை நேடல்கற் றுயர்வாய்.
 
''விரை செய் கான் நலம் வெஃகு இல, நெடியது ஓர் நெறியில்
கரை செய் சால் சிலைக்கு அஞ்சில, கருதிய கடல் சேர்
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து, அனைத்தையும் கடந்து
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய்.

      ''கடலிற் போய்ச் சேரவேண்டிய ஆறு இடையே மணம் பரப்பும்
காட்டின் அழகை விரும்பி அங்கே நின்று போவதில்லை தான் செல்லும்
நீண்ட வழியிடையே கரை கட்டிய தன்மையாய் மிகுந்து கிடக்கும்
கற்களுக்கு அஞ்சி நின்றுவிடுவதும் இல்லை; தான் கருதிய கடலைச் சென்று
சேர்ந்தே நின்று கொள்கிறது. இதன் மூலம் ஆறு ஓர் அறிவு நூலையே
இயற்றித் தருகிறது. அந்நூலை நீயும் தெளிவாக ஆராய்ந்து, அனைத்தையும்
கடந்து அணியணியான சிறப்புகளோடு விளங்கும் குற்றமொன்றுமற்ற
ஆண்டவனைத் தேடும் வழியைக் கற்று, அதனால் உயர்வு பெறுவாயாக.

      
கானின் அழகு உலக இன்பங்களுக்கும், தடைக் கற்கள் ஆன்மீக
வாழ்விற்கு எதிரான சோதனைகளுக்கும் பொருந்துவதாகக் கொள்க. திரை :
திரையை உடைய ஆற்றுக்கு ஆகுபெயர்.

 
                  73
என்னை யுன்னைமுன் னினிதினிற் பேணிய கன்னி
யன்னை வீங்குதன் னருளொடு நிழற்றிய தன்மைத்
துன்னை யோம்புவ ளுன்னுயிர்க் குயிரென வளிப்பள்
பின்னை யோர்துணை பெறுவதும் வேண்டுமோ மகனே.