| 70 |
ஊக்க வித்தினா
லுதித்தமெய்ஞ் ஞானமே மரமாய்
வீக்க நற்றவ வேர்விழப் பொறைதயைக் கவட்டா
னீக்க முற்றியே மகிழ்வுபூத், துயர்ந்தவா னிலைவிட்
டாக்க நற்கனி யருந்திவாழ்ந் துணர்வின் மேற் கனிவாய் |
| |
''ஊக்க
வித்தினால் உதித்த மெய்ஞ்ஞானமே மரமாய்,
வீக்க நல்தவ வேர் விழ, பொறை தயைக் கவட்டால்
நீக்கம் முற்றியே, மகிழ்வு பூத்து, உயர்ந்த வான் நிலை வீட்டு
ஆக்க நற்கனி அருந்தி வாழ்ந்து, உணர்வின் மேற்கனிவாய். |
''ஊக்கமாகிய
வித்தினால் முளைத்த மெய்யறிவே மரமாக அமைய,
அதனைக் கட்டி நிறுத்த நல்ல தவமே வேராக இறக்கி, பொறுமை தயவு
என்னும் கிளைகளால் நீண்டு முற்றி, மகிழ்ச்சியை மலராகப் பூத்து, உயர்ந்த
நிலையான வானுலக வீட்டைத் தனதாக்கிக் கொள்ளுதலாகிய நல்ல கனியை
உண்டு வாழ்ந்து, உணர்வில் அடங்காத இன்பம் காண்பாயாக.
நல்வாழ்க்கைக்கு
மரத்தை உருவகமாக்கி, அதன் பல்வேறு
உறுப்புகளோடு பொருத்திக் காட்டிய திறம் போற்றத் தக்கது.
| 71 |
வான்க லந்தவில்
வனப்பொடு செஞ்சுடர் வயங்கத்
தேன்க லந்தபூ மலர்தலுஞ் செழுஞ்சிறை புடைத்துக்
கான்க லந்தபுட் கணங்கனி பாடலும் கதிர்வான்
கோன்க லந்தசீர் வாழ்த்துனக் குணர்த்திரு குருவே. |
| |
''வான் கலந்த
வில் வனப்பொடு செஞ்சுடர் வயங்க,
தேன் கலந்த பூ மலர்தலும், செழுஞ் சிறை புடைத்துக்
கான் கலந்த புள் கணம் கனி பாடலும், கதிர் வான்
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே. |
''வானமெல்லாம்
பரந்த ஒளியின் அழகோடு ஞாயிறு விளங்கக்
கண்டு, தேனோடு பொருந்திய பூ மலர்தலும், காட்டில் வாழும்
பறவைக்கூட்டம் செழுமையான சிறகுகளை அடித்துக்கொண்டு இனிமையாகப்
பாடுதலுமாகிய இவ்விரண்டும், கதிரொளி வீசும் வானுலக அரசனாகிய
ஆண்டவன் கொண்டுள்ள சிறப்புக்களை நீயும் வாழ்த்த வேண்டுமென்று
உணர்த்தும் இரு குருக்களாய் அமையும்.
|