பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 106

                 68
நாடி ழந்துள நட்பிழந் தியாவையு மிழந்தே
கோடி ழந்தபூக் குழைந்தென நசைகொடு குழையேல்
வீடி ழந்ததீ வினைகொடு செல்வமுற் றறஞ்செய்
பீடி ழந்தபுன் மாக்களிற் பேதைய ரிலையே.
 
''நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே,
கோடு இழந்த பூ குழைந்தென, நசை கொடு குழையேல்.
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம்செய்
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே.

      ''பிறந்த நாட்டையும் இழந்து, உள்ள நட்புறவையும் இழந்து மற்று
யாவைற்றையும் இழந்துவிட்டோமேயென்று, ஆசைக்கு இடந்தந்து, கொம்பை
விட்டு நீங்கிய பூ குழைவது போல் நீயும் குழையாதே. வான் வீட்டை
இழப்பதற்குக் காரணமான தீவினைகள் வழியாகச் செல்வம் பெற்று அறம்
செய் மாண்பும் இழந்த அற்ப மனிதரைக் காட்டிலும் அறிவில்லாதவர்
எவரும் இல்லை.

 
                  69
ஊக்க மேபிதா வுவ்வுதா யுணர்ந்தமெய்ஞ் ஞான
நோக்க மேயொரு நுசுப்பறாத் தோழனாத் தயையி
னீக்க மேமணத் துணைவியா நெடும் பொறை மகனா
வாக்க மேவிய வறத்துற வோரொடு வாழ்வாய்.
 
''ஊக்கமே பிதா, உவ்வு தாய், உணர்ந்த மெய்ஞ்ஞான
நோக்கமே ஒரு நுசுப்பு அறாத் தோழனா, தயையின்
நீக்கமே மணத் துணைவியா, நெடும் பொறை மகனா
ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய்.

      ''ஊக்கமே தந்தையாகவும், தவம் தாயாகவும், உணர்ந்த
மெய்யறிவைக் கடைப்பிடிக்கும் நோக்கமே இடுப்பை விட்டுப் பிரியாத
தோழனாகவும், இரக்கத்தின் நீளமே மணத்துணைவியாகவும், நீடித்த
பொறுமை மகனாகவும் கொண்டு, இவ்வாறு அறநெறிக்கு ஆக்கம் தரும்
இவற்றையெல்லாம் உறவினராகக் கொண்டு வாழ்வாயாக.

      தயையின் நீக்கம் - தயையின் நீளம்; நீடித்ததயை. உறவுக்குக்
காட்டிய உருவக அமைப்புச் சிறந்து நிற்றல் காண்க.