|
அதைக்
கேட்டு மாதியன் நகைத்து, "அரசன் வாழ்க!" என
வாழ்த்தித் தொடர்ந்து கூறுவான் : "மனத்தை வருத்தி வந்து மொய்த்த
கொடிய துயரம் அறும்படி நான் சொல்வதற்கு இணங்கினால், பகைத்து
வந்து தோன்றியவனால் ஏற்படும் பழியையும் அறுத்து, உன் முடியும்
பெயராமல், நாடு முழுவதும் மலர்ச்சி பெற்றுப் பகையின்றி வாழக்
காண்பாய்.
நரபதி
- மனிதர் தலைவன் : அரசன். வாழ்கென - வாழ்க + என
= வாழ்ககென வரவேண்டியது தொகுத்தல் விகாரம் பெற்றது, சொன்னதற்கு
- 'சொல்வதற்கு' என எதிர்காலப் பொருளில் நின்றது. பெயரா - 'பெயராது'
ஈறுகெடட்ட எதிர் மறை வினையெச்சம்.
| 32 |
வளைக
ளார் பொழில் வனையணிக் கரமித மலைமேற்
கிளைக ளார்நிழற் கெழும்பலாக் கனியெலாந் தீந்தேன்
சுளைக ளாயிரந் தரவுமொன் றுயிரடும் விடமாந்
திளைக ளார்கனி சேர்கிலீங் கெவன் செய்வா யென்றான். |
| |
"வளை கள் ஆர்
பொழில் வனை அணிக் கரமித மலைமேல்
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலாக் கனியெலாம் தீம்தேன்
சுளைகள் ஆயிரம் தரவும், ஒன்று உயிர் அடும் விடம் ஆம்;
திளை கள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய்"? என்றான். |
"சூழ்ந்த,
தேன் நிறைந்த சோலைகள் அழகு செய்கின்ற கரமிதம்
என்னும் மலைமேல் கிளைகளால் நிறைந்து நிழல் செறியும் ஒரு பலா
மரத்தின் கனிகளெல்லாம் இனியதேன் கொண்ட ஆயிரம் சுளைகள்
உடையதாகவும், அவற்றுள் ஒரு சுளை உயிரைக் கொல்லும்
நஞ்சுள்ளதாகவும் கொள்வோம். மிகுந்த தேன் பொருந்திய அத்தகைய
கனியொன்று இங்கு உன்கைக்கு வந்து சேர்ந்தால் என்ன செய்வாய்?"
என்றான்.
கரமிதம்
- எருசலேம் பக்கத்து ஒரு மலை. தமிழ் மரபு கருதி
அங்குப் பலாமரம் இடம் பெறுகிறது, தீம் - இனிமை சுட்டும் உரிச்சொல்.
எவன் - 'என்ன' என்று பொருள்படும் வினா வினைக்குறிப்புச் சொல்.
|