பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 20

                      33
கொல்லு மச்சுளை யின்னதென் றறிகிலேற் குவிதேன்
புல்லு மச்சுளை யொருங்கொழிப் பேனெனப் பொருநன்
சொல்லு நீர்மையிற் றுறும்பகை தோன்றில தென்னி
லொல்லு நீர்மையி லொருங்கடக் குழவிக ளென்றான்.
 
 "கொல்லும் அச் சுளை இன்னது என்று அறிகிலேன், குவிதேன்
புல்லும் அச்சுளை ஒருங்கு ஒழிப்பேன்" எனப் பொருநன்,
"சொல்லும் நீர்மையின், துறும் பகை தோன்றிலது என்னில்,
ஒல்லும் நீர்மையில் ஒருங்கு அட குழவிகள்" என்றான்.

      அது கேட்ட அரசன், "கொல்லும் தன்மை வாய்ந்த அச்சுளை
ஆயிரத்துள் அன்னதென்று அறிய இயலாதாயின், நிறைந்த தேன்
பொருந்தும் அச்சுளைகளை யெல்லாம் ஒருங்கே அழிப்பேன்" என்று
சொன்னான். மாதியன், "அரசன் சொல்லும் தன்மை போல், நெருங்கியுள்ள
பகைக் குழந்தை வெளிப்படையாகத் தோன்றுவதற்கில்லையேல், உனக்கு
இயலும் வகையால் குழந்தைகளையெல்லாம் ஒன்றாகக் கொல்லுக," என்றான்.
      
அட - 'அடுக' என்னும் வியங்கோள் வினைமுற்று, பொருநன் -
போருக்கு உரியவன்; இங்கு 'அரசன்' என்ற பொருளில் நின்றது.

 
                    34
கேட்ட வாசகங் கெழுங்குண மெனப்பலர் வாழ்த்தக்
கோட்ட மாமெனக் கூறிய சிலருளத் தஞ்ச
நாட்ட வாயுறு நளமொளித் தரசுரை நவிலா
மீட்டம் மாதியன் விளைவிளை மருளுரை விரித்தான்.
 
கேட்ட வாசகம் கெழும் குணம் எனப் பலர் வாழ்த்த,
கோட்டம் ஆம் எனக் கூறிய சிலர் உளத்து அஞ்ச,
நாட்ட வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலா,
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான்:

      மாதியன் கூறக் கேட்ட வார்த்தை செறிந்த குணமுள்ளதென்று
பலரும் வெளிப்படையாக வாழ்த்தினார். குற்றமுள்ளதென்று தெரிந்தாலும்
அதனை வெளிப்படையாகக் கூறச் சிலர் மனத்துள் அஞ்சி அடக்கிக்
கொள்ள