பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 276

பல நன்மைகள் கூடிப் புணரப்பட்டதோர் பொருள் கடவுள் அல்ல; இதுவும்
அதுவும் என்னாது. பல குணம் உளவன் என்னாது. ஒரு குணமாய் ஓர்
இயல்பாய் நின்றோன் கடவுள் என்க' என்பது பழையவுரை விளக்கக் குறிப்பு.

 
                         162
எப்பொரு ளனைத்து மெவ்வுல கனைத்து
     மிடைவிடா நிறைப்பட நின்றே
யப்பொரு டொறுந்தான் குறுகிலா முழுநின்
     றப்பொரு ளழிவிறா னழியா
மெய்ப்பொருள் ஞானத் தனைத்தையு முணர்ந்து
     விளைதிற னீதியா னடவி
மைப்பொரு ளடராச் சோதியாய் நிலையாய்
     மன்னனா யனைத்துமாய் நின்றோன்.
 

''எப் பொருள் அனைத்தும் எவ்வுலகு அனைத்தும் இடை விடா
                    நிறைப் பட நின்றே,
அப் பொருள் தொறும் தான் குறுகிலா முழு நின்று அப்
                    பொருள் அழிவில் தான் அழியா,
மெய்ப் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து, விளை
                    திறன் நீதியால் நடவி,
மைப் பொருள் அடராச் சோதியாய், நிலையாய், மன்னனாய்
                    அனைத்துமாய் நின்றோன்.


     ''எவ்வகைப் பொருள் அனைத்திலும் எவ்வகை உலகம்
அனைத்திலும் இடைவெளி இல்லாமல் நிறைந்து நின்றவனாய், அந்தந்தப்
பொருள்தோறும் தான் குறுகாமல் முழுமையாய் நின்றும் அப்பொருள்
அழியும்போது தான் அழியாதவனாய், மெய்ப் பொருளை உணரும் தனது
ஞானத்தால் அனைத்தையும் உள்ளவாறு உணர்ந்தவனாய், முதிர்ந்த வல்லமையாலும் நீதியோடும் அனைத்தையும் நடத்துபவனாய், இருள்
என்னும் பொருள் அணுகாத ஒளியாய், நிலைத்த பொருளாய், அரசனாய்,
அனைத்தும் தானேயாய் நின்றவனே மெய்க்கடவுள் ஆவான்.

     இது 'வயின் தொறும் வியாபகன் ஆதல்' என்ற ஐந்தாம் இலக்கணம்
கூறியது.