பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 298

     "பல வகைப்பட்ட தொழில்களுக்கெல்லாம் பழக்கம் என்னும் இதுவே
இயல்பெனினும், அறவொழுக்கம் என்னும் தூய நல்ல தொழிலுக்கு இதுவும்
அல்லாமல், ஆசையின் அளவிற்குத் தக்கபடி பயன் உண்டாகும். சில
தொழில்கள் பலநாள் கற்றும் சிலருக்குத் திருந்த அமைவதில்லையெனினும்,
இந்த அறவொழுக்கம் என்னும் போர்த் தொழிலில் ஒருவன் பயனடைந்து
சிறக்க மனத்துணிவு ஒன்றே போதுமானதாம்.

 
          18
வெந்தகிற் சேக்கை நீங்கி
     வெறுநிலத் தடிக டாமே
வந்ததிற் கிடந்து நோற்ற
     வண்ணமே யொழுகல் வேண்டா
சிந்தையிற் சான்றோ ரெள்ளுந்
     தீவினை யொன்றை நீக்கி
நிந்தையிற் றினிய தூய்நன்
     னெறியுறத் துணிதி யென்றான்.
 
"வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா.
சிந்தையில் சான்றோர் எள்ளும் தீவினை ஒன்றை நீக்கி,
நிந்தை இற்று, இனிய தூய் நல் நெறி உறத் துணிதி" என்றான்.

     "எரிந்த அகிற் புகை ஊட்டிய மெத்தையை விலக்கி, முனிவர்கள்
வெறுந் தரையை அடைந்து, அதனிற் படுத்து நோன்பு செய்யும்
தன்மைபோல் ஒழுக வேண்டிய தேவை இல்லை. நல்லோரெல்லாம் இகழும்
தீவினை ஒன்றை மட்டும் மனத்தை விட்டு நீக்கி, இகழ்ச்சிக்கு இடமில்லாமல்,
இனிய தூய நன்னெறியைக் கடைப்பிடிக்கத் துணிவு கொள்" என்று சூசை
உரையை நிறைவு செய்தான்.

     வெந்தகில் - வெந்த + அகில்: தொகுத்தல் விகாரம், "மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்து அறன்" என்ற குறல் (34) கருத்து ஒப்பு
நோக்குக.