பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 5

                  7
மீன்மு கத்தவர் மேவிமீண் டிலரெனக் கண்டுங்
கான்மு கத்தலர் முல்லையார் கண்டதுங் கடந்த
நூல்மு கத்துயர் சீமையோ னுரைத்தது நுதலிக்
கோன்மு கத்தஞர் குவிந்தெழ வெருவினைக் கொண்டான்.
 
மீன் முகத்து அவர் மேவி மீண்டிலர் எனக் கண்டும்,
கான் முகத்து அலர் முல்லையார் கண்டதும் கடந்த
நூல் முகத்து உயர் சீமையோன் உரைத்ததும் நுதலிக்
கோன் முகத்து அஞர் குவிந்து எழ வெருவினைக் கொண்டான்.

               அம்மூவரசர் அம்மீன் காட்டிய வழியே சென்று எருசலேம்
மீண்டிலரெனக் கண்டான். காட்டில் மலரும் முல்லைக்கு உரியரான
இடையர் சென்று குழந்தையைக் கண்டதும் அளவு கடந்த வேத நூலறிவால்
உயர்ந்த சீமையோன் அக்குழந்தையைக் குறித்துக் கோவிலிற் கூறியதும்
அவ்வரசன் கேட்டறிந்தான். இவை பற்றித் தன்னுள் ஆராய்ந்து, தன்
முகத்தில் துன்பம் குவிந்து பெருக அகத்துள் அச்சங் கொண்டான்.

 
                   8
பிறந்த முன்னிடம் பெயர்ந்துவந் தெருசலேந் தன்னைத்
துறந்த பின்னவன் றொடர்ந்தபல் லிடந்தொடர்ந் தவனைப்
பறந்த தென்னினும் பற்றிமொய்த் தடுகவென் றேவத்
திறந்த குஞ்சிலர் தேடலிற் காண்கிலா தயர்ந்தான்.
 
"பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து, எருசலேம் தன்னைத்
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து, அவனைப்.
பறந்தது என்னினும் பற்றிமொய்த்து அடுக" என்று ஏவ,
திறம் தகும் சிலர் தேடலின் காண்கிலாது அயர்ந்தான்.

      "அக்குழந்தை முன்பு தான் பிறந்த இடம் விட்டுப் பெயர்ந்து
எருசலேமுக்கு வந்து, அதனையும் நீங்கிய பின் தொடர்ந்து சென்ற பல
இடங்களிலும் தொடர்ந்து தேடி, அவன் வானிற் பறந்து சென்றானாயினும்
விடாது மொய்த்துப் பிடித்துக் கொல்லுக" என்று, அதற்குத் தகுந்த திறம்
படைத்த சிலரைத் தேடவிட்டு, அவர்கள் தேடியும் காண இயலாமையால்
அரசன் சோர்ந்தான்.

      எருசலேம் வந்தது சீமையோன் குழந்தையைக் கையில் ஏந்திக்
கோவிலிற் புகழ்ந்த நிகழ்ச்சியால் தெரிய வந்தது.