அவ்வாறு
மயக்கங் கொண்ட நெஞ்சினனான எரோதன் வேத நூல்
வல்லவரையெல்லாம் அழைத்து, "தெளிவு பொருந்திய நல்ல வேத
வாக்குகளை ஆராய்ந்து பார்த்தால், உலகத்தைக் காத்து ஆளும் அவன்
இருள் நிறைந்த இவ்வுலகில் எவ்விடத்து உதிப்பான்?" என வினவ,
எரோதனது அச்சங்கொண்ட நெஞ்சு மேலும் கெடுமாறு, "அவன் வெத்தில
நகரில் உதிப்பான்" என்றனர்.
வெத்திலத்து
உதித்தல் : "எபிராத்தா எனப்படும் பெத்திலேமே,
யூதாவின் குடிவழிகளுக்குள்ளே நீ சிறியதாய் இருப்பினும், இசுரவேலின்
அரசராய் இருக்க வேண்டியவர் எனக்காக உன்னிடமிருந்து கிளம்பிவருவார்.
அவரது தொடக்கமோ பழமைக்கும் பழமையானது" (பழைய ஏற்பாடு,
மிக்கா. 5 : 2).
பெத்திலம்
என்பது மோனை கருதி வெத்திலம் என வந்தது. பாடல்
30இல் பெத்திலம் என்றே வருகிறது. என்னா - என்ன.
6 |
என்ற வாசக
மெறிவைவே லெனவுளம் போழ்ந்து
குன்ற மார்பிடை கொண்டவெங் கொடுமையை மறைத்துச்
சென்ற மூவரைச் செப்பிநீர் வணங்கிமீண் டங்கண்
ணின்ற யாவையும் நீர்சொலப் போவல்யா னென்றான். |
|
என்ற வாசகம்
எறி வைவேல் என உளம் போழ்ந்து,
குன்ற மார்பிடை கொண்ட வெங்கொடுமையை மறைத்து,
சென்ற மூவரைச் செப்பி, "நீர் வணங்கி மீண்டு, அங்கண்
நின்ற யாவையும் நீர் சொலப் போவல் யான்" என்றான். |
என்று
வேதநூல் வல்லார் சொன்ன வார்த்தை எறிந்த கூரிய வேல்
போல் தன் உள்ளத்தைப் பிளந்தமையால், தான் செய்யக் கருதிய பெருங்
கொடுமையைத் மலையொத்த தன் நெஞ்சுள் மறைத்துக் கொண்டு,
தன்னிடம் வந்த மூவரசர்க்கு அவ்விடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி, "நீங்கள்
அக்குழந்தையை வணங்கி மீண்டு வந்து, அங்கு நிகழ்த்த யாவற்றையும்
எனக்குச் சொல்ல, அதன்பின் நானும் வணங்கப் போவேன்" என்றான்.
மூவரைச்
செப்பி - மூவர்க்குச் செப்பி : நான்காம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை உருபு பெற்று மயங்கி நின்றது.
|