பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 864

         மாணாக்கன் புகழ்ந்துரைத்த

            புறவுரை ஆசிரியம்

வானுல கிருந்து வளர்தயை தளிர்ப்பத்
தான்உல கனைத்தும் தழுவிப் புரக்கும்
வானோர்க்கு அரசாள், மண்ணோர்க்கு அருள்தாய்,
ஈனோர் உயர, ஏனையர் உவப்ப,
மாசைப்பூங் கொடியொடு மணந்ததன் துணையெனும்    5
சூசைதன் சரிதம் தொடுத்ததேன் பாவணி
வீட்டுஉரி மொழியாய் விளம்பிய நிலையில், இந்
நாட்டுஉரி மொழியொடு நயந்து இவண் நாட்டின
புறநிலைக் காப்பியப் பொருளாய், வினைஒழி
அறநிலைக் காப்பிய மாக, வண் தமிழாய்,           10
வீரமா முனியென மேல்வட திசையினின்று
ஈரமா தயைஉணர்ந்து இவண்ஒரு குருஉறீஇ,
சருவே சுரன்தான் தந்த திருமறை
சருவர்க்கு உணர்த்தித் தகுங்கதி செலுத்தும்
தயிரிய சாமி, தவறா மொழியுடன்                 15
உயிர்இயல் பயனே உரைத்த திருக்கதை,
வான்பூத்து இழிமது வரக்கொடி கொணர்ந்து
தேன்பூத்து இழிவிரைத் தென்மலை உச்சிமேல்
நட்டுஎன, நறுந்தமிழ் நவின்ற திருப்பயன்
மொட்டு என மலர்ந்து முற்றுஇவண் மணம்இட,       20
தென்மலை உச்சியைச் சேர்திறம் இல்லார்
சொல்மலைப் பயன்உற, துணிவில்அம் மலையினின்று
ஈங்குயான் கொணர்ந்துஎன, ஈர்அறம் அருள்நலம்
வீங்குயாப்பு அரும்பயன் விரித்த உரைஇதே
ஆறுஅறு நூற்றுஐமூன்று அரும்பொருட் பாவும்,       25
ஆறறு படலமும், ஆசுஇல கலந்தநல்
வண்ணம் தொண்ணூறும், மறைக்கதை நூற்றைந்தும்
தண்அம் தமிழ்வலோன் தந்த அரும்பயன்,
கற்றார் உரிமையின் களிப்பது வேண்டியும்,
மற்றார் தெளிதலின் வாய்ப்பது வேண்டியும்          30
கற்றுஉணர்ந்து உணர்த்த, நான் கருதியது இகழ்ந்து
முற்றுஉணர் கலைவலோர் முனிவது வேண்டாம்,
நல்அமிர்து ஏந்திய நலிந்தமட் கலம் என,
சொல்அமிர்து ஏந்திய துகள்உறும் என்உரை
பாரா, அமிழ்துஉணப் பல்உயிர் உய்ந்துமேல்         35
ஈரா நயக்கதி எய்துவது இயல்புஎன.

          புறவுரை ஆசிரியம் முற்றும்

    
தேம்பாவணி மூலமும் உரையும் முற்றும்