‘ஆஅதும் என்னுமவர் ஓஒதல் வேண்டும்’ யான் போகல் வேண்டும், நீ உரைத்தல்வேண்டும் என உயர்திணைப்பல்லோர் படர்க்கை தன்மை முன்னிலைக்கண் வருதலின் அன்று என்க. இம்மூன்றும் ஒருபொருட் கிளவியாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப் பொருள்பட்டே நிற்கும்என்க. தேற்றப் பொருளாவது இக்காரியம் செய்தலே தக்கது, தகுதி, பொருத்தம், துணிவு, தெளிவு, நன்மை, அமைதி, முடிவு, வேண்டுவது; இக்காரியம் செய்யாமையே வழுவே, இழுவே, தீமையே, சிறுமையே, குற்றமே எனப் பொருள்படுதல். உம்மை வேண்டும், இன்மை வேண்டும், பொதுவினை வேண்டும், இக்காரியம் செய்யத்தகும், இக்கூழ் அருந்தத்தகும், இச்சோறு உண்ணத்தகும், வஞ்சரை அஞ்சப்படும், கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும், கீழ்களைச் செய்தொழிலால் காணப்படும், இருவினைக்குத் தக்க உடல், ‘கொள்ளப்படாது மறப்பது என் கூற்றுக்களே’ எனவரும். இங்ஙனம் வரும் செய்யுள்கட்கெல்லாம் நச்சினார்க்கினியர் சேனாவரையர் பரிமேலழகர் உரையாசிரியர் முதலாயினார், முற்றாயும் எச்சமாயும் பொருள் உரைக்கின் வழுவாம் என்று கருதி, வியங்கோள் பொருட்டு என்றும், விதிபொருட்டு என்றும், தகுதிப்பொருட்டு என்றும், வேண்டுவது என்றும், தமக்கு வேண்டியவாறே பொருள் எழுதிச் சொற்குணம் வாளாபோயினர். - 85 உரை எழுத்து என்பதன் இலக்கணம்: 86 எழுத்து என்னும் தொழிற்பெயர் அப்பொருளை விட்டுப் பல்பகா அஃறிணைப்பொருட் பொதுப்பெயராய், அப்பொருளை விட்டு ஓவியம் முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளைவிட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலை உணர்த்தும் மும்மடியாகுபெயராய், அப்பொருளைவிட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்தது எழுத்து’ எனக் கருமகருத்தாவையும் கருவிக் கருத்தாவையும் உணர்த்தும் நான்மடியாகுபெயராய் நின்று பல பொருள்பட்டது காண்க. - 86 உரை |