இருவர் மாறுபட்ட கருத்துக்களை உரைத்தவழி ‘அரி, அயன் என்ற இருவரையும் அரன் அழித்தலால், இவர் கடவுள் அல்லர் அரனே கடவுள்’ என்றாற்போல இரு கருத்துக்களையும் மறுத்து மூன்றாவதொன்று கூறி நிலைநாட்டுதல். - 7 உரை முன்னோர் நூல்களுள் ‘வெள்ளிடைமலை’ போல் விளங்கிக் கிடந்து பயன்படு விதிகள் அளவில்லை. அவற்றுள் ‘இலைமறை காய்போல்’ கரந்து கிடந்து பயன்படாதன சிலவற்றுள் சிறிது எடுத்து உரைத்தனன். - 7 உரை. இறையனார் அகப்பொருள் முதலியவற்றை ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல் முதலியவற்றை ஒரு பொருளாக விரும்புதல் ‘பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல்’ போல்வதாம். - 7 உரை. ‘சேற்று நிலத்தில் கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறானாற் போல’ நன்னூல் சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க. - 8 உரை. வடநூலார் கூறும் சமானாக்கரத்தைத் தமிழ்நூலார் இணை எழுத்து என்று மொழிபெயர்க்க மறந்து போலி எழுத்து என்று மொழிபெயர்த்ததனால், ‘போலிச்சரக்கு, போலி இலக்கணம், போலியுரை’ என்னும் சொற்களைப்போல இதனையும் கருதி, முன்னும் பின்னும் பாராது தள்ளினார். - 91 உரை. அண்மைநிலையாவது, சோறு கடல் முழங்கிற்று உண்டான் - என இடையில் பிறசொற்கள் வந்து பொருந்தற்கு இடங்கொடாமல், தம்முள் அணுகிச் சோற்றை உண்டான் என நிற்றல். இவ்வண்மைநிலை இலக்கணம் உணராதார் யாதானுமொரு பெயரையிட்டுச் சோற்றை உண்டான் - கடல்முழங்கிற்று எனப் பிரித்து வேறு தொடராக்குவர். இதனைச் சிலர் மறுப்பர், அஃது எங்ஙனம் எனின், ‘நாற்குலத் தலைவரும் நாற்குல மகளிரும் தனித்தனியே இருவர் இருவராய்க் கிடப்பின் புல்லுதல் கூடும். இம்முறையன்றி நான்கு தலைவரும் ஒரு நிரையே, பின்பு நான்கு குலமகளிரும் ஒருநிரையேயாக, எண்மரும் ஒருமுறையே கிடப்பின் புல்லுதல் தொழில் கூடாது’.
|