பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 13 

உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் பெயர் தனித்து நின்ற காலை எழுவாய் வேற்றுமை ஆகாது; அது பயனிலை தோன்ற நிற்கும் நிலையாகிய அவசரத்தில் எழுவாய்வேற்றுமையாம் என்று குறிப்பிட்டமை கொண்டு, பெயர் பயனிலை கொண்ட தன்மையும், பயனிலை தன்னைக்கொண்ட தன்மையும் எழுவாய் வேற்றுமையாம் என்ற கருத்துண்மை போதருகிறது.

பெயர் தோன்றிய துணையாய் நின்று எழுவாயாதலின், வினைமுதலாதலே எழுவாய் வேற்றுமையாம் எனப் போந்த பொருளால் எல்லா இலக்கண ஆசிரியரும் உட்கொள்கின்றனர்.]

6விகாரப் பெயரே

தன், தம், நம், என், எம், நின், நும் என்னும் திரிபுஇல் பெயர்கள் உருபுகளையும் உருபோடு வரும் மொழிகளையும் உருபின்றி வரும் மொழிகளையும் ஏற்று நிற்கும். இப்பெயர்கள் எழுவாயாங்கால் திரிந்தே நிற்கும். இத்திரிபே உருபு என்க.

[வி-ரை: தன் என்பது தன்னை என உருபினையும், தன் மைந்தனை என உருபு ஏற்ற பெயரினையும், தன்மைந்தன் என உருபின்றி வருமொழியையும் ஏற்றமைகாண்க. பிறவும் அன்ன, தன் என்பது எழுவாயாங்கால் தான் எனத்திரிந்தே நிற்கும். தன் என்பது தான் எனத் திரிதல் போல்வன எழுவாய் உருபுஎன்க.

வடமொழியில் பிராதிபதிகமாகிய பெயர்ப்பகாப்பதம் வேறு; அது திரிந்து அமையும் முதல்வேற்றுமை ஆகிய பிரதமாவுபத்தி வேறு. வடமொழியில் முதல் வேற்றுமை இவ்வாறு இருக்கும் என்பதை அறிவித்தற்குத் தொல்காப்பியனார் நும் என்ற ஒரு சொல்லை மாத்திரம் பெயர் இயற்சொல்லாகக் காட்டி அதன் திரிபாகிய நீயிர் என்பது எழுவாய் வேற்றுமையாம் என்றார். அவர் நீயிர் என்பதனை இயற்கைச்சொல்லாகவே கொண்டு சொற் படலத்தில் ஈரிடத்துக் கூறுதலின், நும் என்பது நீயிர் எனத் திரிந்தது பிறன்கோள் கூறுதலாகவே கொள்ளப்படும். இவ் வடமொழிமரபைத் தமிழில் கொண்டு தன், தம் முதலியனவே இயற்கைச் சொற்கள்; அவற்றின் திரிபுகளாகிய தான் தாம் என்பன எழுவாய் வேற்றுமை என்று கூறும் கூற்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.]