பக்கம் எண் :

64இலக்கணக் கொத்து 

வி-ரை: தான் தனக்கென ஓர் ஊரும் ஒருபெயரும் ஒரு வடிவும் ஏற்றுக்கொண்டிருப்பவன் அல்லன் ஆயினும், திருவாவடுதுறை என்ற ஊரை ஏற்றுக்கொண்டு, அம்பலவாணன் என்னும் பெயரையும் கொண்டு, ஞானமே வடிவமாகக் கொண்டு, மகாசந்நிதானமாக வீற்றிருக்கும் குருவாம் அரசனை, வீடு பெற விரும்புவாருக்குப் பாரமாகத் தோன்றும் உடல் தொடர்பு நீங்குமாறு புகழ்ந்து, அவன் திருவடியைப் போற்றுவோமாக.

‘இறைவனே குருவடிவாகிக் குவலயந்தன்னுள், திருவடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகை உபதேசிப்பன், என்பது சான்றோர் கருத்து. 3

வடமொழிப் போதகாசிரியர் வணக்கம்

4செப்பறைப் பதியில் வாழ்சிவத் துவிசன்
கனக சபாபதி கருதுவட நூற்கடல்
தபோதனார் புகழும் சைவாதி ராசன்
உபய பதங்களை உண்மையொடு பணிவாம்

வி-ரை: செப்பறை என்ற ஊரில் வாழ்கின்ற ஆதிசைவர் மரபில் உதித்தவனும், கனக சபாபதி என்ற இயற்பெயரை உடையவனும், சான்றோரால் போற்றப்படும் வடநூலறிவில் கடல் போன்றவனும் ஆகிய, தவத்தையே செல்வமாகக் கொள்ளும் சான்றோர்கள் புகழத்தக்க சைவசமயத்துப் பேரரசனுடைய திருவடிகள் இரண்டனையும் மனம் மொழி மெய் மூன்றும் ஒன்றிய உண்மையோடு பணிவோமாக. 4

தமிழ்ப் போதகாசிரியர் வணக்கம்

5திருநெல்வேலி எனும்சிவ புரத்தன்
தாண்டவ மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல்
வாழ்மயி லேறும் பெருமாள் மகிபதி
இருபத கமலம் என்தலை மேற்கொண்டு
இலக்கணக் கொத்துஎனும் நூல்இயம் புவனே.