பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 565

[வி-ரை: திருநெல்வேலி என்னும் சைவத் திருப்பதியை இருப்பிடமாக உடையவனும், தாண்டவமூர்த்தி என்பாருடைய மகனும், செந்தமிழ் அறிவில் கடலாக இருப்பவனும் ஆகிக் கல்விச் சிறப்போடு வாழ்கின்ற மயிலேறும் பெருமாள் என்னும் பெருஞ் செல்வனுடைய இரண்டு திருவடித்தாமரைகளையும் என் தலையிற் சூடி இலக்கணக்கொத்து என்னும் இந்நூலினை ஆக்குகின்றேன்.]

நிறைந்த கல்வியுடையார் மாட்டுச் செல்வம் வாழ்நாள் அதிகாரம் முதலியநலன்கள் குறைதல் பெரும்பான்மை; இவனுக்கு ஒரு குறையும் இல்லை என்பது தோன்றப் பெயருக்கு முன்னும் பின்னும் அடை கொடுத்தாம்.

பலர் நூல்களினும் பலர் உரைகளினும் சிதறிக்கிடந்த சில விதிகளை ஒவ்வொரு சூத்திரத்தால் ஒருங்கே அறியக் கிடத்தலின், இலக்கணக்கொத்து என்று காரணப்பெயர் பெற்றது காண்க.

[வி-ரை:

‘இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு’.                                           கு-374

என்ற குறட்பாவினையும்,

‘நாவின் கிழத்தி நணுகுதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து’.                                           நாலடி-252

என்ற நாலடியார் அடிகளையும் நோக்கிக் கல்வியும் செல்வமும் ஒருங்கு நில்லாமையே உலகில் பெரும்பான்மை என்பது அறிக. பெயருக்கு முன்அடை ‘வாழ்’ என்பது. பின்அடை ‘மகிபதி’ என்பது.

இந்நூலமைப்பிற்கு இலக்கண நூல்களேயன்றி அவற்றின் உரைகளும் அடிப்படையாதல் சிறப்புப்பாயிரத்துள்ளும் சுட்டப்பட்டுள்ளது.

இறைவணக்கப் பாடல் மூன்றானும் வீடுபேற்றை விரும்பும் இவ்வாசிரியர் இக்கருவி நூல் யாத்தமை, பேரறிவோர் பிறருக்குப் பயன்படுமாற்றால் செய்யுள் அருளிச்செயல்களும் ஒன்றாம் என்பது இந்நூல் எண்பதாம் நூற்பா உரையால் தெளிவுறுதலும் நோக்குக.] 5