பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 667

 அவ்விரண் டனையும் அளவிடப் படாவே,14
இந்நால் வகையினுள் என்னால் இயன்றது
சிறப்பாய் உள்ளன சிலதே டினன், அவை
மறப்பு என்னும் பகைவன் வாரிக் கொண்டனன்,15
அவன்கையில் அகப்படாது அடங்கின வற்றுளும்
சிறிதினைச் சிறியேன் சிறிது சிறார்தமக்கு
உரைத்தனன்; அன்றிஈது ஒருநூல் அன்றே;
இவ்வழக்கு அறிந்தோர் இகழுதல் வழக்கே!
இவ்வழக்கு அறியார் இகழுதல் வழக்கே.16

இது அவையடக்கம், இதற்குப் பொருள்கூறின் மிகவும் பெருகுமாதலின், இன்றியமையாதனவற்றிற்கு மாத்திரம் சுருக்கிக் கூறுகின்றாம். இந்நூல் முழுதும் அது.

1பத்தொடு ஒன்பது பாடை நூல்களுள்
மாறுபாடு உறுதல் வழக்கே

எழுத்து ஐம்பத்துமூன்று; முப்பது-இது பாடைமாறுபாடு.

[வி-ரை: வடமொழியும் ஏனைய பதினெண் மொழிகளுமாக மொழிகள் பத்தொன்பதாயின. இப்பதினெண் மொழிகள் வழங்கும் நிலங்களுக்கெல்லாம் வடமொழி பொதுவாகலின் வேறாகப் பிரித்துக் கொள்ளப்படுகிறது.

‘மண்டலத்துப் பதினெண் தேசிகச்சொல் வடசொல்’ பி. வி. 18

‘முட்டிலா மூவறு பாடை மாக்களும்’

‘முனிவுஅற அருளிய மூவறு மொழியுளும்’ நன். சிற. பாயி.

‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாம்இவையே’.

என்ற மேற்கோள்களான் பாடைகள் பத்தொன்பதாமாறு அறியப்படும்.