பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 11, 12121

ஆதலின் பல நூல்களையும் ஆராய்ந்து ஐயம் திரிபு கொண்டார்க்கே இந்நூல் நோக்குதற்கு ஏற்றது என்பதும் சுட்டப்பட்டன. சிறிது கற்றாருடைய அறிவு இந்நூலின்கண் புகுந்து செய்திகளை முற்ற உணர்தல் இயலாது ஆதலின், இந்நூல் அவர்களுக்கு எள் அளவு கூடப் பயன்படாது என்பது உணர்த்தப்பட்டது. சிறிது கற்றார் இந்நூலுட் புகுதல், மனத்தெளிவு இல்லாதவன் மெய்ப்பொருளைக் காண்பது போல்வதாகும். மேலும் குழந்தை கையில் கொடுக்கப்பட்ட பொற்கிண்ணம் மதிப்பிழத்தல் போலச் சிறிது கற்றார் கையில் இந்நூல் அகப்படின் மதிப்பு இழக்கும்.]

இந்நூல் எடுத்துக்காட்டுப்பற்றிய செய்தி

12இந்நூற்கு உதாரணம் தொன்னூல் செய்யுளுள்
சிலவே எழுதினம்; பலவே எழுதினம்
உலக வழக்கினுள் உணரும் பொருட்டே.

ஆதன்தந்தை என்பது செய்யுளில் வருங்கால் அவ்வாறு வாராது ஆந்தை என்றே வரும், இச்சொல்லை வேற்றுமைத் தொகைக்கு உதாரணம் காட்டினமாயின், சிற்றதிகாரங்களைக் குற்றம் அற முற்றக்கற்ற கூரியரும் அவ்வாறு கொள்ளாது, ‘நிலைமொழி ஏதோ, அவ்வீறு ஏதோ, ‘வருமொழி ஏதோ, அம்முதல் ஏதோ, எவ்வுருபு தொக்கதோ, எங்ஙனம் தொக்கதோ ஈது ஒரு பறவைப் பெயரோ, பிழைபட்டதோ’ எனப் பலவும் எண்ணி அலைவரே; அப்பொருள் பெறாரே.

பிணிக்கண் வருந்தினான், நேர்ந்தான், கொடுத்தான் என்பது உருபு தொக்குச் செய்யுளில் வருங்கால், இக்குச்சாரியை பெற்றுப் பிணிக்கு வருந்தினான் என்றே வரும். இச்சொல்லை வேற்றுமைத் தொகைக்கு உதாரணம் காட்டினமாயின், அவ்வாறு கொள்ளாது உருபு விரிந்தது என்றே துணிந்து, உரையையும் உதாரணத்தையும் பிழை என்றே கருதுவர். அதுபற்றிச் ‘சில’ என்றாம்.