நாலுகை வெட்டினான், அஞ்சு நாள் பயந்தான் - இச்சொல்லை உலகவழக்குப் பற்றி எண்ணுப் பெயருக்கு உதாரணம் காட்டினமாயின், பேரதிகாரங்களைப் பெரிதும் உணர்ந்த பெரியோர் அவ்வாறு கொள்ளாது, நான்ற கையை வெட்டினான் - அஞ்சத்தக்க காலத்து அஞ்சினான் என்று பொருள் துணிந்தே விடுவர், நான்கு ஐந்து என்பதே வழக்கம் ஆகையால். அது பற்றிப் ‘பல’ என்றாம். எனவே, இருவழக்கும் ஒன்றற்கு ஒன்று பொருந்தாமை காண்க. இருவருக்கும் பொருந்தல் வேண்டும் என்னும் கருத்தான் பலவற்றையும் சிலவற்றையும் கழித்தனம் என்பது ‘உணரும் பொருட்டே’ என்பதனால் அறிக. யாம் கூறிய விதிகட்குச் செய்யுள் இல்லை என்று எண்ணற்க என்பது தாற்பரியம். வி-ரை; ஆதன் + தந்தை - ஆதனுக்குத்தந்தை, ஆந்தை. பிணி + இக்கு + வருந்தினான் - இக்கு சாரியை; பிணிக்கண் வருந்தினான் என்பது பொருள். பிணிக்கு வருந்தினான் என்பதன் கண் ‘கு’ வேற்றுமை உருபு அன்று. பிணிக்கு நேர்ந்தான், பிணிக்குக் கொடுத்தான் என்பனவும் அன்ன. நாலுகை, அஞ்சுநாள் - நான்காகிய கை, ஐந்தாகிய நாள், இவை வினைத்தொகையுமாகித் தொங்குங் கை, அஞ்சும் நாள் எனவும் பொருள்படும். இந்நூற்குச் செய்யுள்வழக்கு எடுத்துக்காட்டுக்களை விட, உலக வழக்கு எடுத்துக்காட்டுக்களே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாற்பரியம் - போந்த பொருள்.] 12 பாயிரவியல் - முற்றும். |