| வினையியல் - நூற்பா எண். 13 | 207 |
இனி, ஒருபொருளின் புடைபெயர்ச்சியே வினை என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. அவ்வினையைக் கொள்ளுதலால் வினையெச்சம் என்பதும் அங்ஙனம் முடிந்தது. அவ்வினையெச்சம் வினையைக்கொள்ளுதலன்றி வினையின்மையைக் கொள்ளாது என்பதும் அங்ஙனம் முடிந்தது. ஆகவே, உண்டு நடந்தான் என்பது பொருந்தும். உண்டு நடவான் என்பது பொருந்தாது; இலக்கணவழுவேயாம். ஆகையால், அம்மறைச்சொல்லினுள் முதல்நிலையைப் பிரித்து ஒரு பொருளின் புடைபெயர்ச்சி ஆகிய புடைபெயர்ந்து நடத்தல் என்னும் தொழிற்பெயராக்கி, வினையெச்சத்தை வினைகொண்டு முடித்துப் பின்பு செய்யான் என்னும் மறையை வருவித்து உண்டு நடத்தலைச்செய்யான் என்று முடிப்பர். இக்கருத்துப் பரிமேலழகருக்கும் உரையாசிரியருக்கும் நியமம். இது மறைச்சொல்லின் முதல்நிலை விதிப்பொருள் பெற்றது. [வி-ரை: பிரயோக விவேகம் 39ஆம் காரிகை உரையுள், ‘‘உண்ணாது வந்தான், உண்டு வாரான் - என எச்சமும் முடிக்குஞ் சொல்லும் எதிர்மறுத்தன. ‘மருங்கோடித் தீவினை செய்யான் எனின்’ (கு. 210). ‘கற்றிலகண்டு அன்னம் மென்னடை’ (கோவை 97) என்னும் குறளினும் திருக்கோவையாரினும் பரிமேலழகரும் பேராசிரியரும் செய்தலோடும் கற்றலோடும் முடியும் என்பர். இதுவும் அது. பிரதியோகி நியோகியோடே ஒக்கும் என்பதே கருத்தாயிற்று. இதனை ஆகாரியாரோபம் என்பாரும் உளர். ‘அறவினை யாதெனின் கொல்லாமை’ - (கு. 321) என்னும் குறளும் பரிமேலழகர் விலக்கியது ஒழிதலும் செய்தலோடு ஒக்கும்ஆதலின் கொல்லாமை அறவினை ஆயிற்று என்பர். ‘பள்ளியும் ஈரம் புலராமை ஏறற்க’ -(ஆசார. 19) என்பது எச்சமும் முடிக்குஞ்சொல்லும் எதிர்மறுத்தலின் அது சொல்லான் முடியாது. ஈரம் புலர்ந்தபின் ஏறுக எனப் பொருள்படுதலின், அஃது எதிர்மறை ஆகாது என்க. இதனை அலங்காரநூலார் அபாவாபாவம் என்ப’’ என்று குறிப்பிட்டதும் காண்க.] 13 |