‘உடுப்பது, உண்பது’ - கு. 166 ‘இல்வாழ்வான் என்பான்’ - கு. 41 - இவை செயப்படுபொருள். ‘வேல் அன்றி வென்றி தருவது’ - கு. 546 ‘வெல்வது அரண்’ - கு. 748 - இவை கருவி, ‘விளைவது நாடு’ - கு. 732 யாம் இருப்பது உறையூர் - இவை இடம். ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ - கு. 339 ‘பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை’ - கு. 61 - உறங்குவது, விழிப்பது, அறிவது - இவை தொழிற் பெயர். இங்ஙனம் முறையே வினைமுற்றுப் பெயர் இவ்வைந்தாதல் காண்க. வி-ரை: பிரயோக விவேகம் 37ஆம் காரிகையுரையுள், ‘‘வினைமுற்றுப் பெயராகிய கிருதந்தம் கருத்தா ஆதியாதல் முதலாக ரூப பேதம் பொருந்தல் ஈறாக ஒன்பது இலக்கணமும் பெறும் என்றவாறு. ‘ஆதி என்றமையால் கருமமும், பாவமும், கரணமும், அதிகரணமும் கொள்க. தார் தாங்கிச் செல்வது தானை’ - கு. 767 ‘வினையே செய்வது’ -தொ. சொ. 112 - என்னும் இரண்டும் அஃறிணையில் கருத்தாவான வினைமுற்றுப்பெயர். ‘எடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்’ -கு. 166 - இவ்விரண்டும் கருமமான வினைமுற்றுப்பெயர். |