விரல் என்னும் சொல் தனக்கு முதலாகிய கையையும், சினையாகிய நகத்தையும் உணர்த்தாது தான் அங்குலமே (விரல் என்பதன் வடமொழிப்பெயர்) என்று பொருள் உணர்த்தலே சொல்லாற்றல். நகம் என்னும் சொல் ஒருகால் உகிரையும், ஒருகால் மலையையும் உணர்த்தலே ஆற்றல்கெட்டது. சிலை வளைத்து வென்றான்; சிலையால் ஆலயம் செய்தான் - என்னும் தொடரினுள் முறையே கல் வில் என்று உணர்த்தாது’ வில்-கல் என்று உணர்த்தலே பொருளாற்றல். ‘இப்பணம் முழுதும் கொடாதே’ என்னும் தொடரினுள், ஒரு கால் சிறிதாயினும் கொடாதே என்றும், ஒரு கால் சிறிது வைத்துப் பெரிது கொடு என்றும், ஒரு கால் பெரிதுவைத்துச் சிறிது கொடு என்றும் உணர்த்தலே ஆற்றல் கெட்டது. [வி-ரை: ஒவ்வொரு சொற்கும் ஒரு பொருளே உண்டு. ஒருவடிவாய்ப் பல பொருள்களை உணர்த்தும் பல சொற்களை, எழுத்து ஒற்றுமை நோக்கிப் பலபொருள் ஒருசொல் என்று கோடல் வழக்கில் வந்துவிட்டது. ‘நகு’ என்பதனைப் பகுதியாகக் கொண்டு உகிரை உணர்த்தும் நகம் என்ற சொல் வேறு; நக; என்ற வடசொல் திரிந்து நகம் என்றாகி மலையை உணர்த்தும் சொல் வேறு. இவ்வாறே சிலை மரத்தால் செய்யப்பட்டது என்ற பொருளில், ஆகுபெயராய் வில்லை உணர்த்தும் சிலை என்ற சொல்லும் வேறு; சிலா என்ற வடசொல்லின் திரிபாய்ச் சிலை என்றாகிக் கல்லை உணர்த்தும் சொல்லும் வேறு இவற்றை வரும் இடன் நோக்கி எவ்வெப்பொருட்கண் வந்தன என்று கோடல் வேண்டும். தனியே எடுத்துக்கூறின், எழுத்தொற்றுமையால் இவை பல பொருட்கும் பொதுவாதலின், இவை ஆற்றல் கெட்டன எனப்பட்டன. சொல்லாற்றல் தனிச் சொல்லினும், பொருளாற்றல் தொடர்மொழியினும் கொள்ளப் படும். |