பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 16279

‘முழுதும் என்னும் முற்றுமை எச்சப்பொருளும் தருதல்,

‘முற்றிய உம்மை தொகைச்சொல் மருங்கின்
எச்சக் கிளவி உரித்தும் ஆகும் ’                            - தொ. சொ. 285.

என்பதனால் கொள்ளப்படும். ஏற்புழிக்கோடலான் இதற்கு உம்மையை முடிக்குஞ்சொல் மறைப் பொருளில் வருதல் வேண்டும் என்பது.

முதற்பொருளில் ‘முழுதும்’ முற்றும்மை; ஏனைய இரு பொருளிலும் எச்சஉம்மை. இப்பொருள்வேறுபாடு சொற்களை எடுத்தல் படுத்தலாக ஒலிப்பதனால் பெறப்படும்.]

மொழிப்பொருட்காரணம் ‘மொழிப்பொருட்காரணம்’            - தொ. சொ. 394

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துள் காண்க.

[வி-ரை: ஒவ்வொரு சொல்லின் தோற்றத்துக்கும் ஒரு காரணம் உண்டு. மொழி தோன்றிய காலத்திலிருந்த சொல்லின் பழைய உருவத்தை உள்ளவாறு அறிந்து அதன் தோற்றக் காரணம் காணுதல் அத்துணை எளிமை உடைத்து அன்று என்பது தொல்காப்பியனார் கருத்து. ‘மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ என்ற நூற்பாவின் சேனாவரையர் உரை பின்வருமாறு:

‘‘உறு, தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையால் கொள்வதல்லது, அவை அப்பொருள் ஆதற்குக் காரணம் விளங்கத்தோன்றா என்றவாறு.

‘‘பொருளோடு சொற்கு இயைபு இயற்கையாகலான், அவ்வியற்கையாகிய இயைபால் சொல் பொருளுணர்த்தும் என்பர் ஒரு சாரார்; ஒரு சாரார் பிற காரணத்தால் உணர்த்தும் என்ப. அவற்றுள் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது, நம்மனோர்க்குப் புலனாகாமையின், மொழிப் பொருட்காரணம் இல்லை என்னாது ‘விழிப்பத்தோன்றா’ என்றார். உரிச்சொல் பற்றி ஓதினாரேனும், ஏனைச்சொற்பொருட்கும் இஃது ஒக்கும்.’’]

இந்நான்கு இலக்கணமும் அறிதல் அருமைநேக்கிக் ‘கருதுவ கருதுக’ என்றாம். 16