பக்கம் எண் :

 இலக்கணக் கொத்து 

தோன்ற ‘வாரிக்கொண்டனன்’ என்றாம். ‘அடங்கினவற்றுள்ளும் சிறிது’ என்பதற்குக் காரணம் ‘எளியவிதிகளை’ (7) என்னும் தொடரான் மேற்காட்டுதும்.

[வி-ரை: நால்வகை - விதி, விலக்கு, சொற்கூட்டம் பொருட்கூட்டம் என்பன. முன்கூறிய ஒன்றனையே பின்னும் ஒரு காரணம் பற்றி எடுத்துக் கூறுதல் அநுவாதம் எனப்படும். முன் மொழிந்தது புரோவாதம் எனப்படும். ஈண்டு அநுவாதத்தால் பயன் வீடு நீங்கலான செய்திகள் எல்லாம் இந்நான்கனுள் அடங்கும் என்பது. இவற்றின் பரப்பை நோக்க, இந்நான்கனுள் ஒன்றனைக்கூட முழுதும் அளவிடல் இயலாது. கடல்நீர் முழுதையும் நாழி முகவாவிடினும் தான் கொள்ளும் அளவிற்றாகவாதல் முகந்துவருதல் கூடும்; அதுபோல, முழுதையும் கூறாவிடினும் இலக்கண ஆசிரியர்கள் தத்தம் அறிவு ஆற்றலுக்கு ஏற்ப இந்நான்கனுள் தாம் அறிந்து தெளிந்தவற்றை எடுத்துக் கூறுவர் என்பது. நாழிபோலாது, உருவமற்று என்றும் அழியாது அறிவு மயமான ஞானம்மக்களுக்கு ஆண்டவனால் அருளப்பட்டிருப்பினும், அறிவு, உலகப்பற்றுக்களால் தடைபட்டுத் தன் ஆற்றல் குறைந்து விடும் என்பது.

வடநூலார் சொல்லிலக்கணம் ஒன்றனையே இலக்கணம் என்று கூறுவர். அக்கருத்தை உடன்பட்டு இவ்வாசிரியரும் சொல்லிலக்கணமே சிறந்தது என்பர். அங்ஙனமே தாம் வழிபடும் சான்றோர் கருத்தை ஒட்டி, இயற்றமிழ் - சைவசமயநூல்கள் - வீட்டுநூல் - ஞானநூல் இவற்றின் தனிச் சிறப்புக்களை ஏனையவற்றிலிருந்து பிரித்துக் கூறுகிறார். சரியை முதலிய - சரியை, கிரியை, யோகம் என்பன. எளியவிதிகளை யாவரும் அறிவர் ஆதலின் அவற்றை விடுத்து, மிக அரிய விதிகளையே கூறலின் ‘சில’ என்றார். இம்மூன்று - தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் என்பன.]

16சிறிதினைச் சிறியேன் சிறிய சிறார்தமக்கு
உரைத்தனன் அன்றிஈது ஒருநூல் அன்றே
இவ்வழக்கு அறிந்தோர் இகழுதல் வழக்கே !
இவ்வழக்கு அறியார் இகழுதல் வழக்கே