| பாயிரவியல் - நூற்பா எண். 6 | 85 |
கற்றோர் எல்லாருள்ளும் கடையேன் என்பது தோன்றச் ‘சிறியேன்’ என்றும், கூரியோர்க்குத் தொல்காப்பியம் முதலிய நூல்கள் இருத்தலால் ஏனையோர்க்கே இது என்பது தோன்றச் ‘சிறிய’ என்றும், தருணர்க்கு எல்லாம் அந்நூல்கள் இருத்தலின் பாலர்க்கே இது என்பது தோன்றச் ‘சிறார்’ என்றும், ஓரதிகாரமாயினும் இதனுள் அறியக்கூடாது என்பது தோன்ற ‘நூல் அன்று’ என்றும், நூல் அன்று என்று எம்மால் சொல்லியிருக்கவே, குற்றமுண்டாயினும் கூறார் என்பது தோன்ற ‘வழக்கே’ என்றும், வழக்கு அறியாதார் வழக்கையும் இகழுதல் இயற்கையே என்பது தோன்ற ‘வழக்கே’ என்றும் கூறினாம். ‘காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு’ - குறள் 849 என்பதனுள் இகழுதல் இயற்கை என்பது காண்க. அவையடக்கம் என்று பெயரிட்டு இங்ஙனம் பலவற்றையும் விரித்ததனால்பயன்என்னெனின், பலவாற்றானும் புழுத்தநாயினும் கடையேனது அறியாமையை எல்லோர்க்கும் அறிவித்தல் ஒன்றுமே பயன் என்க. இவ்வாசகம் முடிந்தது முடித்தல் என்னும் உத்தி. [வி-ரை: இந்நூல் இளையோர்க்கே என்றும், இச்சிறு நூலுள் ஓரதிகாரச் செய்திகூட முற்றக் கூறப்படவில்லை என்றும், இச்செய்தி அறிந்து சான்றோர் இதனை இகழார் என்றும், கீழோருக்கு எதனையும் என்றும் இகழுதல் இயற்கை என்றும், தாம் விரும்பியவாறே எதனையும் செய்யும் கீழோருக்கு அறிவுரை கூறுபவன் அறிவிலியாவான் என்றும் கூறி, வெவ்வேறாகப் பல நூல்களுள் கூறப்பட்ட செய்திகள் ஒருங்கு புலப்படவேண்டி அவற்றை ‘முடிந்தது முடித்தல்’ என்னும் உத்தியால் தொகுத்துச் சுட்டியுள்ள செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். ‘பணியுமாம் என்றும் பெருமை’ (குறள் 978) என்ற சான்றோர் உரைக்க இணங்கத் தம்மைத் தாழ்த்திக்கொண்டு பேசுதல் சான்றோர் பலருக்கும் இயல்பு என்க. 6 |