பக்கம் எண் :

14இலக்கணக் கொத்து 

ஆறாம் வேற்றுமை கிழமைப்பொருளோடே அன்றி, கருவித் தொடர்பான பொருளோடும் வரும்.

ஏழாம் வேற்றமை இடப்பொருளேயன்றித் திரிபின் ஆக்கப் பொருளிலும் வரும்.

ஓருருபு நிற்கவேண்டிய நிலைக்களத்தில் பிறிது ஓர் உருபுவரின், பொருள் பொருத்தமுற அமைதற்கு உரிய உருபையே பொருள்பற்றி மேற்கொள்ளும் உருபுமயக்கமும் உண்டு.

சில உருபுகள் ஒரே பெயரையடுத்து ஒரே முடிக்குஞ் சொல்லால் முடியினும், தமக்குஉரியபொருள் மாறாமல் இருத்தலும் உண்டு (பழியை அஞ்சும், பழியின் அஞ்சும்,)

சில, உருபுகள் ஒன்றன் நிலைக்களத்துப் பிறிதொன்று வந்தும், பொருள் பொருத்தமுற அமையும் தடுமாறு உருபுகளாக வருதலையும் காணலாம்.

உருபு நோக்கிய சொல் ஒரே சொல்லாக இருத்தலும், இரண்டு சொற்களாகவே இருத்தலும், ஒரு சொல்லும் இரண்டு சொற்களும் உறழ்ந்து வருதலும் என முத்திறத்தன.

உருபு நோக்கிய சொல் உருபின் பொருள் என்ற பெயரில் பல பொருள்படுதலைத் தொல்காப்பியனார் முதலாயினார் விரித்துக் கூறியுள்ளனர். ஆதலின் அவை இந்நூலுள் நுவலப்பெறவில்லை.

வேற்றுமைகள் ஒரு வரையறையுட்பட்டு அடங்காது பலவாகப் பரந்து காணப்படினும், வினைமுதல் முதலாக இடம் ஈறாக விளம்பப்படும் எட்டுப் பொருளில் ஒவ்வொரு பொருளே வெவ்வேறு ஆதலும், ஒவ்வொரு பொருளிலும் பல உருபுகள் வருதலும், உருபுகள் தமக்கு உரிய பொருளை உணர்த்துதலோடு வேறு பொருள்களையும் உணர்த்துதலும் ஆகிய மூன்று கூறுபாடுகளுள் எல்லாவகைப்படும் வேற்றுமைகளையும் உட்படுத்திக் காணலாம்.