கருவி - ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்னும் உருபுகளோடு வரும். கொள்வோன் எல்லா உருபுகளோடும் வரும். நீக்கம் - இரண்டு, நான்கு, ஐந்து என்னும் உருபுகளோடு வரும். குறை - நான்கு, ஐந்து, ஆறு, ஏழு என்னும் உருபுகளோடு வரும். இடம் - ஒன்று, மூன்று, நான்கு, ஏழு என்னும் உருபுகளோடு வரும். இனி, உருபுகள் தமக்கு உரிமையாய்த் தோன்றும் பொருள் களுடன் தமக்கு உரிய பொருள் அல்லனவற்றையும் உணர்த்துமாறு கூறப்படுகிறது. வேற்றுமைகளின் பொது இலக்கணங்களை வடமொழி மரபை ஒட்டிக்கூறும் ஆசிரியர், சிறப்பிலக்கணங்களைத் தமிழ்மொழிமரபை உட்கொண்டே குறிப்பிட்டுள்ளமை குறித்து உணரத்தக்கது. எழுவாய் செயப்படுபொருள் பொருண்மையிலும் வரும். செயப்படுபொருள் தான் அல்லாத பிறபொருளையும் தெரிக்கும். மூன்றாம் உருபுகள் கருவி கருத்தா உடன் நிகழ்வு அன்றியும், வினையின்மை, வேறுவினை, மயக்கம், ஒப்பு, ஒப்புஅல்ஒப்பு, ஒற்றுமை முதலிய பொருள்களிலும் வரும். நான்காம் வேற்றுமை கொடைப்பொருளோடு, ஆதிகாரண காரியம், நிமித்தகாரண காரியம், இருவகைப் பெயர்ப்பின் வினையெச்சம், இருவகைப் பெயர்ப்பின் பெயரெச்சம் என்ற பொருள்களில் வரும். (இருவகைப்பெயர் - பொருட்பெயர், தொழிற்பெயர் என்பன). ஐந்தாம் வேற்றமை நீக்கப் பொருளில் வருவதோடன்றி ஒப்பு, எல்லை, ஒப்பின்மை என்ற பொருள்களிலும் வரும். |