பக்கம் எண் :

12இலக்கணக் கொத்து 

குறை - குறை என்று பெயரிடப்பட்டுள்ள ஆறாம் வேற்றுமை ஒற்றுமைக்குறை வேற்றுமைக்குறை என இருவகைத்து. ஒற்றுமைக்குறை ஒன்றாய்த் தோன்றல், உரிமையாய்த் தோன்றல், வேறாய்த்தோன்றல் என்ற முப்பகுப்புக்களை உடையது. அவற்றுள் ஒன்றாய்த்தோன்றும் தற்கிழமை - ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம், திரிபின் ஆக்கம், சினை, பண்பு, தொழில் என்ற அறு பகுப்புக்களை உடையது, உரிமையாய்த் தோன்றும் பிறிதின் கிழமை - பொருள், இடம், காலம், இருவகைநூல் (சம்பந்தனது தமிழ், சம்பந்தனது பிள்ளைத்தமிழ் என்றாற்போல ஒருவர் இயற்றியனவும் ஒருவரைப்பற்றி இயற்றியனவும் ஆம்) என ஐவகைப்படும். வேறாய்த் தோன்றும் பிறிதின்கிழமை முன் ஒருவர்க்கு உடைமையாகவும், பின் வேறு ஒருவர்க்கு உடைமையாகவும் வரும் சாத்தனது பசு என்றாற்போன்ற நிலைமையில் உடைமைகளை நிலைக்களனாகக்கொண்டு தோன்றும்.

இடம் - இடம் என்னும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் பற்றியும், இடம் அல்லாப்பொருள் பற்றியும் வரும். இடத்து நிகழ்பொருள் உருவினை உடையனவாகவும் உருவினை இல்லனவாகவும் வரும். அவற்றுள் இடப்பொருள் காலம், திக்கு, ஆகாயம், வெயில், இருள், நிலம், அரு, உரு முதலிய பலவாம். இவ்விடம்பற்றி வரும்பொருள்கள் - உரிமை, ஒற்றுமைத் தொடர்பு கலப்புத் தொடர், எங்கும் பரவியிருத்தல் என்ற நாற்பகுப்பினுள் அடங்கும். இடம் அல்லா இடம்பற்றியன கூட்டிப்பிரித்தல், பிரித்துக்கூட்டல், இருவரின் முடியும் ஒரு வினைத்தொழிற்பெயர் என்ற முப்பகுப்பிற்று.

இனி, இங்ஙனம் பொதுவாக இலக்கணம் கூறப்பட்ட வேற்றுமைகளுள் ஒப்பாய் நிற்கும் உருபுகளும், ஒரு பொருட்கே பல உருபுகள் வருவனவும், வேறு உருபுகள் வருவனவும் ஆகிய மூவிலக்கணங்களும் ஒருங்கே தோன்றச் செய்திகள் உரைக்கப் பட்டுள்ளன.

கருத்தா - ஒன்று, மூன்று, நான்கு, ஆறு என்னும் உருபுகளோடு வரும்.

செயப்படுபொருள் - எல்லா உருபுகளோடும் வரும்.